9,000 கோடி சொத்து : X-ல் விவாகரத்து பஞ்சாயத்து - போலீஸ் மீது லஞ்ச புகார்!
பிரபல மென்பொருள் கம்பெனியின் இணை நிறுவனரும் அவரது மனைவியும் ஒருவர் மீது மற்றொருவர் மாறிமாறி கூறிவரும் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதோடு, சென்னை காவல்துறை 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தொழிலதிபர் பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. அதுபற்றி விரிவாகப் பார்க்கலாம்.
Advertisement
மனைவி மீதும் சென்னை காவல்துறை மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இவர், RIPPLING மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனரான பிரசன்னா சங்கர்.
சென்னையைச் சேர்ந்த இவர் திருச்சி NIT-ல் படித்துவிட்டு சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு RIPPLING என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவருக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரசன்னா சங்கருக்கும் - திவ்யா என்பவருக்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார்.
அனூப் என்பவருக்கும் திவ்யாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு தாம் அறிந்துகொண்டதாகக் கூறும் பிரசன்னா, விவாகரத்துப் பெற முடிவு எடுத்ததாகச் சொல்கிறார். தமது புகாருக்கு ஆதாரமாக அனூப்புக்கு, திவ்யா அனுப்பிய MESSAGEகளை காட்டும் அவர், அவற்றை அனூப்பின் மனைவி தம்மிடம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
விவாகரத்தின் ஒருபகுதியான ஜீவனாம்சத்தைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டு இருந்ததாகவும், அப்போது தம் மீது திவ்யா பொய் புகார் அளித்தாகவும் பிரசன்னா கூறுகிறார். அதிகமாக ஜீவனாம்சத்தைப் பெற வேண்டும் என்பதற்காக குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தம் மீது புகாரளிக்கப்பட்டது என்கிறார். அவற்றை விசாரித்த சிங்கப்பூர் காவல்துறை முகாந்திரம் இல்லை என்றுகூறி தம்மை விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விவாகரத்துப் பெறத் தாம் விரும்பிய போது, கூடுதல் தொகைக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் DIVORCE மனுத்தாக்கல் செய்த திவ்யா தமது மகனை அந்நாட்டுக்கே அழைத்துச் சென்றுவிட்டதாகச் சொல்கிறார் பிரசன்னா.
அதுதொடர்பான வழக்கில் திவ்யாவுக்கு 9 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் மாதம்தோறும் 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க ஆணையிட்டதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் தாய் - தந்தை இருவரிடத்திலும் சரிபாதி நாட்கள் மகன் வளர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டதாகத் தெரிகிறது. மகனின் பாஸ்போர்ட்டை பொதுவான ஒரு லாக்கரில் வைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனால் மகனை திவ்யாவிடம் அனுப்பத் தாம் விரும்பவில்லை என்றும் பிரசன்னா கூறுகிறார்.
அதனால் தம் மீது திவ்யா குழந்தை கடத்தல் புகார் கொடுத்ததால் மகனுடன் தமிழ்நாட்டைவிட்டுத் தப்பிவிட்டதாக எக்ஸ் தளத்தில் பிரசன்னா பதிவிட்டுள்ளார்.
தமது தரப்பு நியாயத்தை வழக்கறிஞர் மூலம் காவல்துறைக்கு அனுப்பியதாகவும் எனினும் அதை ஏற்காமல் தம்மை காவல்துறை தேடுவதாகவும் தெரிவித்துள்ளபிரசன்னா, மகனைக் கடத்தவில்லை என்றும், சிறுவன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறி அதுதொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமது நண்பர் கோகுலை காவல்துறையினர் பிடித்து வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் பரபரப்பு பதிவைப் பிரசன்னா வெளியிட அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தம் மீது பிரசன்னா சங்கர் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள திவ்யா, தமது கணவர் ஒரு பாலியல் குற்றவாளி என்கிறார். மகனைக் கடத்தி வைத்துக்கொண்டு பிரசன்னா சங்கர் மிரட்டுவதாகவும் தங்களை ஏமாற்றி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்ததாகவும் சொல்கிறார் அவர்.
சொத்துகளை மாற்றியதில் முறைகேடு செய்து வரி ஏய்ப்பில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும், கழிவறை மற்றும் படுக்கை அறையில் கேமரா வைத்து பெண்களை வீடியோ எடுக்கும் நபர்தான் பிரசன்னா சங்கர் என்றும் குற்றம்சாட்டுகிறார் திவ்யா.
இப்படி இருவரும் மாறிமாறி புகார் கூறி வரும் நிலையில் இரண்டு பேருக்கு ஆதரவாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.