DEEP STATE மூலம் சதி செய்யும் அமெரிக்கா? பா.ஜ.க. புகாரும் பின்னணியும் - சிறப்பு கட்டுரை!
இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை முயன்று வருவதாக குற்றச்சாட்டியிருக்கிறது ஆளும் கட்சியான பாரதிய ஜனதா. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அதிலும் அமெரிக்காவின் DEEP STATE அமைப்புக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் தொடர்பிருக்கிறது என்று பா.ஜ.க. எம்.பி.-கள் குற்றம்சாட்டினால் கேட்கவும் வேண்டுமா? இந்தப் புகாரை பிரான்ஸ் நாட்டின் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தி இருப்பதாக பா.ஜ.க. கூறியிருக்கும் நிலையில் DEEP STATE என்றால் என்ன என்பதை முதலில் பார்த்துவிடலாம்.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI மற்றும் உளவு அமைப்பான CIA-வைச் சேர்ந்தவர்களைக் கொண்ட ஒரு ரகசிய அமைப்பே DEEP STATE. அமெரிக்காவுக்கு ஆமாம் சாமி போடாத நாடுகளின் அரசாங்கங்களை கவிழ்ப்பதுதான் DEEP STATE-ன் வேலை.
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஊடகங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டது DEEP STATE. இதில் அமெரிக்க கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ் முக்கியப் பங்கு வகிக்கிறார். அவர் மூலமே ஆட்சிக் கவிழ்ப்புக்கு தேவையான பணம் விநியோகிக்கப்படுகிறது.
தங்களது OPERATION-களுக்காக உலகம் முழுவதும் பல்வேறு போலியான தன்னார்வ அமைப்புகளைத் தொடங்கும் சோரோஸ், அவற்றின் மூலம் மனித உரிமைகள் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாடு போன்ற பணிகளைச் செய்வதாக போக்குக்காட்டிவிட்டு UNDER GROUND-ல் பயங்கர வேலைகளைச் செய்வார் என்று கூறப்படுகிறது.
பெரும் போராட்டங்கள், ரத்தமில்லா யுத்தங்கள் மூலம் தங்களுக்கு ஒத்துவராத தலைவர்களின் அரசுகளை கவிழ்க்கும் பணியை DEEP STATE செய்யும். மற்ற நாடுகளின் இறையாண்மையைப் பற்றி கவலைப்படாமல் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி அராஜகமாக தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதில் வல்லரசு நாடான அமெரிக்கா கில்லாடி.
நற்பணிகளைச் செய்வதாகக் கூறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வேறு சில வேலைகளைச் செய்கின்றன என்பதை மத்திய அரசு முன்பே கண்டுபிடித்துவிட்டது. அதனடிப்படையில் 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத 6 ஆயிரத்து 677 தொண்டு நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.
எனினும் ஜார்ஜ் சோரோஸின் OPEN SOCIETY FOUNDATION, FORD கார் கம்பெனி நிறுவனர் HENRY FORD-ன் மகன் EDSEL FORD தொடங்கிய THE FORD FOUNDATION, EBAY நிறுவனர் PIERRE OMIDYAR-ன் OMIDYAR NETWORK ஆகிய தொண்டு நிறுவனங்கள் பல்வேறு வழிகளில் இந்தியாவுக்குள் நிதியை கொண்டு வந்து, அரசுக்கு எதிராக போராடுவோருக்கும், அரசுக்கு எதிராகச் செயல்படும் ஊடகங்களுக்கும் வழங்குவதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டில் கல்வி கற்க விரும்பும் இந்தியர்கள்தான் இவர்களின் முதல் இலக்கு. அந்த மாணவர்களின் படிப்புச் செலவை ஏற்கும் தொண்டு நிறுவனங்கள் அவர்களை மூளைச் சலவை செய்கின்றன. சர்வாதிகாரம், எதேச்சேதிகாரம் போன்ற வலிமையான சொற்களை அரசுக்கு எதிராக பயன்படுத்தும் வகையில் மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள்.
ஜார்ஜ் சோரோஸ் இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார் என்பதற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மியூனிக் நகரில் அவர் பேசிய வார்த்தைகளே சாட்சி. "தொழிலதிபர் அதானி பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கவில்லை.
இதுபற்றி நாடாளுமன்றத்தில் அவர் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரம் மோடியை பலவீனப்படுத்தும். அதன்மூலம் இந்தியாவில் நிர்வாக சீர்த்திருத்தங்கள் ஏற்படுவதுடன் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படும்" என்றார் சோரோஸ். அவரது கருத்துக்கு இந்தியா கடும் எதிர்வினை ஆற்றியது.
உக்ரைன், ரஷ்யா, ஹங்கேரி மற்றும் அரபு நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தவும், முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் எதிராகவும் செயல்பட்டவர் சோரோஸ் என்பதால் இந்த விவகாரம் இந்தியாவுக்கு மிக முக்கியமானது.
அண்மையில் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி மாணவர் போராட்டம் மூலம் கவிழ்க்கப்பட்டது. இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்லுறவைப் பேணி வந்த ஹசீனா, அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தார். 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கதேச நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தம்மை பிரதமர் நாற்காலியில் இருந்து அகற்ற அமெரிக்கா விரும்புவதாக கூறியிருந்தார்.
சீனாவை எதிர்கொள்ள வங்கதேசத்தில் இருக்கும் செயின்ட் மார்ட்டின் தீவில் ராணுவத் தளம் அமைக்க வேண்டும் என அமெரிக்கா வற்புறுத்தியதாகவும் அதற்கு உடன்பட மறுத்ததால் உள்நாட்டுச் சதி மூலம் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
தற்போது அமெரிக்காவின் DEEP STATE இந்திய பிரதமர் மோடியை குறிவைத்திருப்பதாகக் கூறுகிறது பா.ஜ.க. 2020-ஆம் ஆண்டு ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி அமெரிக்காவில் ஆட்சியைப் பிடித்ததும் இந்தியாவுக்கு எதிரான சில கருத்துகள் அந்நாட்டிடம் இருந்து வெளிப்பட்டன.
குறிப்பாக மனித உரிமை மீறல், மதச் சுதந்திரம், கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா வெளியிட்ட கருத்துகள் மத்திய அரசுக்கு எதிராக இருந்தன.
எனினும் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் நட்புடனே செயல்பட்டுவந்தன. பைடனுடன் ஒப்பிடுகையில் ட்ரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் நல்ல நட்பு உண்டு. இருப்பினும் அவர் அதிபரானதும் இந்திய இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஒருவருடனான நட்புக்காக எங்களது கொள்கைகளை விட்டுவிட முடியாது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்சிட்டி கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் கண்ணோட்டத்தில்தான் ஜார்ஜ் சோரோஸின் புலனாய்வு பத்திரிக்கை அதானி குழுமத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை பார்க்க வேண்டும் என்கிறார்கள். ஜார்ஜ் சோரோஸும் ராகுல் காந்தியும் இணைந்து இந்தியாவுக்கு எதிராக கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகாவது இதெல்லாம் மாறுமா? அல்லது அப்போதும் தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.