செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

'MAKE IN INDIA' திட்டத்தின் மைல்கல் : உள்நாட்டின் முதல் MRI SCAN தயாரிப்பு - சிறப்பு தொகுப்பு!

08:00 PM Mar 30, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

ஸ்கேன் செலவை 30 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைக்கும் வகையில், இந்தியா தனது முதல் உள்நாட்டு MRI இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நாட்டின் முதல் MRI இயந்திரத்தின் இறுதி கட்ட பரிசோதனைகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கப்படவுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

காந்த அதிர்வு இமேஜிங் இயந்திரமான MRI, பல்வேறு நோய்களைக் கண்டறிவதற்கான ஒரு சிறந்த நோயறிதல் கருவியாகும். உடலின் உட்புறப் பகுதிகளைத் துல்லியமாக படம் பிடிக்க MRI இயந்திரம் பயன்படுகிறது. பூமியின் காந்தப்புலத்தை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு பெரிய காந்தப்புலங்களை உருவாக்கும் காந்தங்களையே MRI இயந்திரம் பயன்படுத்துகிறது. இந்த காந்தங்களில் குளிரூட்டியாக ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது.

MRI-க்கான உலகளாவிய சந்தையின் பெரும்பகுதியை GE ஹெல்த்கேர், பிலிப்ஸ் மற்றும் சீமென்ஸ் ஆகிய நிறுவனங்களே வைத்துள்ளன. ஜப்பானின் ( Toshiba ) தோஷிபா மற்றும் (Hitachi ) ஹிட்டாச்சி ஆகிய நிறுவனங்களும் MRI கருவியை உற்பத்தி செய்து வருகின்றன.

Advertisement

இந்தியா தற்போது சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து எம்ஆர்ஐ இயந்திரங்களை இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் தற்போது சுமார் 3500 MRI இயந்திரங்கள் உள்ளன. ஒன்றரை டன் MRI இயந்திரம் என்றால் 6 கோடி ரூபாயும், 3 டன் MRI இயந்திரம் என்றால் 10 கோடி ரூபாயும் செலவாகிறது.

இந்தியாவில் சுமார் 8000 MRI இயந்திரங்கள் தேவை என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதற்குப் பெரிய முதலீடுகள் தேவைப்படுவதோடு, சாதாரண மக்களுக்கு ஸ்கேன் செலவும் மிக அதிகமாகும்.

மருத்துவ சாதனத் துறையில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, தேசிய மருத்துவ சாதனக் கொள்கையை 2023ம் ஆண்டு, மத்திய அரசு அறிவித்தது. மருத்துவ தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைவதே இந்த கொள்கையின் நோக்கமாகும்.

தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மருந்தியல், மருத்துவ தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டுத் (PRIP) திட்டத்துக்கான நிதியை 200 சதவீதம் அதிகரித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ( MeitY) மேக் இன் இந்தியாவின் ஒரு பகுதியாக MRI இயந்திரத்தை உள்நாட்டில் தயாரிக்கும் SCAN ERA திட்டத்தை செயல்படுத்தியது.

ஏற்கெனவே, இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் MRI இயந்திரங்களில் பயன்படுத்தப்படும், இந்தியாவின் முதல் உயர் காந்த அமைப்பை 2022 ஆம் ஆண்டில்,வெற்றிகரமாக உருவாக்கினர்.

அதன் தொடர்ச்சியாக, இந்தியா தனது முதல் உள்நாட்டு MRI இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. வரும் அக்டோபருக்குள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இறுதி கட்ட பரிசோதனை தொடங்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த சாதனை மூலம், இறக்குமதியை சார்ந்திருப்பது 85 சதவீதம் குறையும் என்றும், ஸ்கேன் செலவும் 30 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறையும் என்று கூறப் பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் உட்பட தேவைப்படும் எல்லா இடங்களிலும் இந்த இயந்திரங்கள் அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

2014ம் ஆண்டு தொடங்கிய MRI இயந்திரங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான மேக் இன் இந்தியா முயற்சி, வெற்றிகரமாக முடிந்துள்ளது. இது,மருத்துவ தொழில்நுட்பத்தில் இந்தியாவின் குறிப்பிடத் தக்க மைல் கல்லாகும்.

Advertisement
Tags :
FEATUREDMAINPM ModiIndiaMake in indiaAIIMS Delhifirst indigenous MRI machineMRI machineMagnetic resonance imaging
Advertisement