For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

NEW WORLD ORDER : ராஜதந்திர தாக்குதல் கோலோச்சும் இந்தியா!

06:05 AM May 24, 2025 IST | Murugesan M
new world order   ராஜதந்திர தாக்குதல் கோலோச்சும் இந்தியா

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக ராஜதந்திர தாக்குதலைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை  அணிசேரா கொள்கையாக நாட்டின்  முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அமைத்தார்.  தொடர்ந்து வந்த மற்ற பிரதமர்களும் நேருவின் வழியையே பின் பற்றினார்கள்.

Advertisement

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016-ம் ஆண்டில் 120 நாடுகள் கொண்ட அணிசேரா நாடுகளின் வருடாந்திர கூட்டத்தில் முதல்முறையாகப் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை . இதன்மூலம் அணிசேரா கொள்கையில் இருந்து இந்தியா விலகுகிறது என்ற செய்தியைப் பிரதமர் மோடி சர்வதேசத்துக்குத் தெரிவித்தார்.

இந்தியா உட்பட எந்த நாடும் மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் முன்னேற முடியாது என்பது தான் இந்த நூற்றாண்டின் விதியாகும். ஆகவே, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை, பன்முகத்தன்மை கொண்டதாகப்  பிரதமர் மோடி அமைத்திருக்கிறார்.

Advertisement

அதாவது, தனது நலன்களுக்காக அனைவருடனும் இருப்பதும், நலன்கள் பாதிக்கப்படும் இடங்களில் அதற்கு எதிராகப் பேசத் தைரியம் இருப்பதும் இந்தியாவின் பன்முக வெளியுறவுக் கொள்கையாக உள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, பஹல்காமில்,சுற்றுப்பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு நேபாளி உட்பட 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் மீது உரிய நடவடிக்கை  எடுக்குமாறு பாகிஸ்தானை  வலியுறுத்திய இந்தியா, பாகிஸ்தானுக்கு ராஜதந்திர முறையில் தேவையான அவகாசம் கொடுத்தது. இந்திய வெறுப்பையே மூலதனமாகக் கொண்ட பாகிஸ்தான், இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிராகப் பதிலடி கொடுக்க இந்தியா தீர்மானித்தது. இந்துமத சாஸ்திரப் படி, பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் இறந்து, மிகச் சரியாக 16வது நாளில், ஆபரேஷன் சிந்தூர்  என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. குறிவைக்கப் பட்ட பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் மேற்கு எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா இடைமறித்துத் தாக்கி அழித்தது. மேலும், நூர் கான் சக்லாலா, ரஃபிகி, முரித்கே, சியால்கோட் உள்ளிட்ட பாகிஸ்தானின் முக்கிய 11 விமானத் தளங்களைக் குறிவைத்து இந்தியா தாக்கி அழித்தது.

இந்தியாவின் நெருப்புத் தாக்குதலைத் தங்க முடியாத பாகிஸ்தான் ,போர் நிறுத்தத்துக்குக் கெஞ்சியது. இதைத் தொடர்ந்து, இந்தியா தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தியது. நான்காவது முறையாக நடந்த போரிலும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுள்ளது. நான்கே நாட்களில் மிகக் குறைந்த சேதாரத்துடன் இந்தியா நிகழ்த்திய தாக்குதல் உலக வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துவிட்டது.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து,  அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசு விளக்கியது. இதனைத் தொடர்ந்து, ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும், பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்கும் ஒரு சர்வதேச தொடர்புத் திட்டத்தை இந்திய வெளியுறவுத் துறை மேற்கொண்டுள்ளது.

இதற்காக,அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்றக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும், ஒரு குழுவுக்கு ஒரு வெளியுறவுத் துறை அமைச்சகப் பிரதிநிதி இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள், அமெரிக்கா, இங்கிலாந்து,தென்னாப்பிரிக்கா,கத்தார்,ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட 30 நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் நிலையை விளக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற குழுவினரின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை  அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒருங்கிணைத்து வழிநடத்துகிறார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு  எதிரான  போரில்  இந்தியா உலகளாவிய ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவுடன் நட்புணர்வு பேணவே எல்லா நாடுகளும் விரும்புகின்றன.

புதிய உலக ஒழுங்கில், இந்தியா தனது இடத்தை வெற்றிகரமாக உருவாக்கி வருகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement