For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

02:50 PM Jul 02, 2025 IST | Murugesan M
raw புதிய தலைவர்   நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்த  பராக் ஜெயினை, இந்தியாவின் ரா உளவு அமைப்பின் தலைவராகப் பதவியேற்றுள்ளார். யார் இந்த பராக் ஜெயின் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1965-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 22 நாட்கள் போர் நடந்தன.
போரில் இந்தியாவின் வலிமை மேலோங்கி இருந்தது.

Advertisement

ஆனாலும் பாகிஸ்தானிடம் எவ்வளவு ஆயுதங்கள் உள்ளன என்ற தகவல் இந்தியாவிடம் இல்லை. பாகிஸ்தானுக்கு ஆயுதம் அனுப்புவதற்கு அமெரிக்கத் தடை விதித்திருந்த காரணத்தால் . போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட தேதியில் பாகிஸ்தானிடம் ஏறக்குறைய எல்லா ஆயுதங்களும் தீர்ந்துபோயிருந்தன.

துல்லியமான உளவுத் தகவல்கள் இல்லாததே பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு உறுதியான வெற்றியைப் பெற முடியாததற்குக் காரணம் என்று அப்போதைய ராணுவ தளபதி ஜே.என்.சௌத்ரி தெரிவித்திருந்தார்.

Advertisement

உடனடியாக, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) என்ற பெயரில் புதிய உளவுத்துறை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.1968 ஆம் ஆண்டு, செப்டம்பர் 21 ஆம் தேதி  'ரா' அமைப்பு தொடங்கப் பட்டது. நாட்டுக்கு வெளியே  உளவுத்தகவல்களைச் சேகரிப்பது ரா-வின் பொறுப்பாகும்.

நாட்டின் முக்கிய உளவு அமைப்பான ரா-வின்  தலைவராக பணியாற்றிவந்த ரவி சின்ஹாவின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள பராக் ஜெயின் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.

1989 ஆம் BATCH - IPS அதிகாரியான பராக் ஜெயின் முதலில் பஞ்சாப் கேடரில் பணியமர்த்தப் பட்டார்.  அது    காலிஸ்தான் பிரிவினை வாதிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளால் பஞ்சாப் திணறிக் கொண்டிருந்த காலம் . ஒரு மென்மையான காவல் துறை அதிகாரியாக இருந்த போதிலும், காலிஸ்தான் பயங்கர வாதத்தைக் கன கச்சிதமாகக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.

விரைவில், பஞ்சாப் முதல்வரின் பாதுகாப்புக் குழுவில் பராக் ஜெயின் சேர்க்கப் பட்டார். ஒரே நேரத்தில்  சண்டிகரில் மூத்த காவல் கண்காணிப்பாளராகவும், லூதியானாவில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.

தொடர்ந்து, கனடா மற்றும் இலங்கையில் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றிய காலத்தில், காலிஸ்தான் பயங்கரவாத வலையமைப்புகளைக் கண்காணித்து, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக வளரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்துப் பல ஆண்டுகளுக்கு முன்பே தகவல் தெரிவித்திருந்தார்.

இலங்கையில், பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம், பொது தேர்தல்,ஆட்சி மாற்றம் நடந்த இக்கட்டான காலத்தில், பராக் ஜெயின் இலங்கையில் பொறுப்பு மிக்க இந்திய பிரதிநிதியாக செயல்பட்டார்.  ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்த காலத்தில்,மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தார் பராக் ஜெயின்.

2019-ல் பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியபோதும்,  2019-ல் 370-வது சட்டப் பிரிவுநீக்கப் பட்ட போதும், ஜம்மு காஷ்மீரில்,பராக் ஜெயின் மேற்கொண்ட உளவுத்துறை நடவடிக்கைகள் மிக முக்கியமானவையாகும்.

உளவுத்துறையில்  “super sleuth” என்று பாராட்டப் படும் பராக் ஜெயின், மனித நுண்ணறிவைத் தொழில்நுட்ப நுண்ணறிவுடன் இணைப்பதில் வல்லவர் ஆவார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்க இந்தியா தொடங்கிய ஆப்ரேஷன் சிந்தூர், உயிரிழப்பும் சேதமும் இல்லாமல் முழு வெற்றிபெற பராக் ஜெயினின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கூறப்படுகிறது.

24 நிமிடங்களில், இந்திய எல்லைக்குள் இருந்த படியே,பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள், 21 பயங்கரவாத பயிற்சி முகாம்களை மிகத் துல்லியமாகத் தரைமட்டமாக்க இவரின் உளவுத் தகவல்களே பயன்பட்டுள்ளன.

புத்திசாலித்தனமான மனதைக் கொண்ட பராக் ஜெயின், ஒருபோதும் ஆத்திரம் அடையாமல், அவசரமாகச் செயல்படாமல்,எப்போதும் கணக்கிடப்பட்ட அளவீடு செய்யப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பவர் என்று சக அதிகாரிகள் பெருமையாகக் கூறியுள்ளனர்.

காவல் துறை பயிற்சி மைதானத்தில் தொடங்கி இந்தியாவின் உளவுத்துறையின் தலைவர் என்று உயர்ந்த பதவி வரை  பராக்கின் பயணம், எப்போதும் வளர்க்க விரும்பும் ஒழுக்கம், தன்மை மற்றும் உறுதியைப் பிரதிபலிக்கிறது என்று அவருக்குப் பயிற்சி அளித்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எல்லைகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் சவால் விடுகின்றன. இந்தச் சூழலில், ரா-அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பராக் ஜெயின், நம்பிக்கையின் அடையாளமாகத் தெரிகிறார்.

எப்போதும் சரியான வரைபடத்துடன் பணியாற்றும் பராக் ஜெயின், நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement