REAL HERO, மறுபிறவி கண்ட சைஃப் அலிகான், வியக்கும் மருத்துவர்கள் - சிறப்பு கட்டுரை!
அடையாளம் தெரியாத நபரால் தாக்குதலுக்குள்ளான பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அறுவைச் சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரின் முதுகுத் தண்டில் இருந்து அகற்றப்பட்ட இரண்டை இன்ச் கத்தியின் புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Advertisement
மும்பை பாந்த்ரா குடியிருப்பில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், 15 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சரமாரியாக தாக்குதலுக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைஃப் அலிகானை தாக்கிய நபரின் வீட்டினுள் வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கும் நிலையில் காவல்துறையின் விசாரணையும் விரிவடைய தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் உடலில் ஆறு இடங்களில் கத்திக்குத்துக்கு உள்ளாகி ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அறுவைச் சிகிச்சையின் மூலம் சைஃப் அலிகானின் முதுகில் இருந்து அகற்றப்பட்ட இரண்டரை இன்ச் அளவிலான கூர்மையான கத்தியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கை மற்றும் கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சைஃப் அலிகான், தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், தற்போது நன்றாக நடப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடலில் அத்தனை காயங்கள் ஏற்பட்ட போதிலும் சைஃப் அலிகான் தைரியமாக இருந்ததாகவும் திரையுலகில் மட்டுமல்ல, நிஜ உலகிலும் அவர் உண்மையான ஹீரோ தான் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் அவரின் உடலில் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீண்டு வர சில காலம் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சைஃப் அலிகானின் இல்லத்திலிருந்த சிசிடிவி கேமிராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், காவல்துறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. சைஃப் அலிகான் இல்லத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கும், கைது செய்யப்பட்ட நபருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் 10க்கும் அதிகமான தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சைஃப் அலிகான் இல்லத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான நபரின் முகமும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ஷாருக்கான் இல்லத்தை வேவுபார்த்தாக சந்தேகிக்கப்படும் நபரின் தோற்றமும் ஒரே மாதிரியாக இருப்பதாக காவல்துறையின் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் ஷாருக்கான் இல்லத்தின் அருகே இருந்த ஏணி இரண்டு அல்லது மூன்று பேர் தூக்கும் அளவிற்கு எடை கொண்டது என்பதால், இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், பணிப்பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தடுக்க வந்ததால் மட்டுமே சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது சைஃப் அலிகான் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பதையும் கண்டறிய காவல்துறையினர் முழுவீச்சில் விசாரணை நடத்தி வருகின்றனர்.