For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

Truth Social தளத்தில் இணைந்த பிரதமர் மோடி : ட்ரம்பின் டிஜிட்டல் ராஜதந்திரமா?

09:15 PM Mar 19, 2025 IST | Murugesan M
truth social தளத்தில் இணைந்த பிரதமர் மோடி   ட்ரம்பின் டிஜிட்டல் ராஜதந்திரமா

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் ஆர்வத்தையும் பல்வேறு யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ட்ரூத் சோஷியல் என்றால் என்ன ? அது எப்படி வேலை செய்கிறது ?  என்பதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சமீபத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த லெக்ஸ்  ஃபிரிட்மென் நடத்தும் PODCAST நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில்,  துணிச்சலானவர் என்றும், சுயமாக முடிவெடுப்பவர் என்று ட்ரம்பை, பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். இந்த கலந்துரையாடல் வீடியோவை, ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல்  தளத்தில்  பகிர்ந்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.  ட்ரூத் சோஷியலில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரும் நாட்களில், இத்தளத்தில்  உள்ள அனைவருடனும் ஆக்கப் பூர்வமான உரையாடல்களில் ஈடுபடவும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் பிரதமர் மோடி தனது முதல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

2019ம் ஆண்டு,​​'ஹவுடி மோடி'  மேடையில் ட்ரம்புடன் நின்று கையசைக்கும் புகைப் படத்தை வெளியிட்டிருக்கிறார். இரண்டாவது பதிவில், லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் நடத்திய மூன்று மணி நேர உரையாடலின் வீடியோவைப் பகிர்ந்து கொண்டதற்காக ட்ரம்புக்கு நன்றி தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி.

Advertisement

ட்ரூத் சோஷியலில் கணக்கு தொடங்கிய 24 மணிநேரத்தில், பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ( 24000 ) இருபத்து நாலாயிரத்தை தாண்டியது. அதே நேரத்தில் பிரதமர் மோடி, அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபரை மட்டுமே பின்தொடர்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. பிரதமர் மோடியை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக ட்ரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப் கார்ப்பரேஷனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

2020 தேர்தலில் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து போராட்டக்காரர்கள் அமெரிக்க தலைநகரை முற்றுகையிட்டனர்.  2021 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த அமெரிக்க கேபிடல் கலவரங்களுக்குப் பிறகு, ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகிய நிறுவனங்கள் ட்ரம்புக்குத் தடை விதித்தன. இந்த தளங்கள் எல்லாம்  ட்ரம்ப் வன்முறையைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டின.

அப்போது ட்ரம்ப் தொடங்கியது தான் ட்ரூத் சோஷியல் என்னும் சமூக ஊடகம் ஆகும். பெரிய சமூக ஊடக தளங்கள் தணிக்கை செய்யப்பட்டதாக உணர்ந்தவர்களுக்கான சுதந்திர தளமாக ட்ரூத் சோஷியலை  ட்ரம்ப் உருவாக்கினார். இதன் மூலம், சமூக ஊடகங்களில், சுதந்திரமான பேச்சு  மற்றும் கட்டுப்பாடற்ற கருத்து வெளிப்பாட்டுக்கான இடத்தை ட்ரம்ப் உறுதியளித்தார்.

தொடங்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலிகளின் பட்டியலில் ட்ரூத் சோஷியல் முதலிடத்தைப் பிடித்தது. டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குழுமத்துக்குச்  (TMTG) சொந்தமான Truth Social தளம், எக்ஸ் தளம்  போலவே கட்டமைக்கப்பட்டுள்ளது. ட்ரூத் சோஷியலில் பதிவிடும் தகவல்கள்   'Truths' என்று அழைக்கப்படுகின்றன, மறுபதிவுகள் 'Re-Truths' என்று அழைக்கப் படுகின்றன.  மேலும், கட்டண விளம்பரங்கள் 'ஸ்பான்சர் Sponsor Truths  என்று அழைக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு, பிப்ரவரியில் Truth Social தளத்தை சுமார் 5 மில்லியன் மக்கள் பயன்படுத்துவதாக Similarweb என்ற ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.  எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கி, எக்ஸ் என்று பெயர் மாற்றி நடத்திவருகிறார். எனினும், இப்போதும், ட்ரம்ப், தனது  ட்ரூத் சோஷியலில் மட்டுமே பதிவிட்டு வருகிறார்.

Truth Social-ல் ட்ரம்பை  பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 9.28 மில்லியன் பேர் இருந்தபோதிலும், தளத்தின் பயனர் போக்குவரத்து எக்ஸை விட 400 மடங்கு பின்தங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. Truth Social நிறுவனத்தின் 57 சதவீத பங்குகளை ட்ரம்ப் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தின் மதிப்பு 4.45 பில்லியன் அமெரிக்க டாலராகும்.  கடந்த ஆண்டு, இந்த நிறுவனம் 3,308 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது. அதே ஆண்டு, வெறும் 30 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக ஈட்டியுள்ளது.

ட்ரூத் சோஷியல் தற்போது அமெரிக்காவில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. 140 கோடி இந்தியர்களிடம் கொண்டு சேர்த்தால், ட்ரூத் சோஷியல் தளம் விரிவடையும் என்று ட்ரம்ப் நினைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே தான் ட்ரூத் சோஷியலில் பிரதமர் மோடியின் PODCAST கலந்துரையாடலைப் பகிர்ந்திருக்கிறார் என்று வணிக வல்லுநர்கள் கூறுகிறார்கள். பிரதமர் மோடி, ட்ரூத் சோஷியலில் இணைந்திருப்பது, ட்ரம்பின் டிஜிட்டல் ராஜதந்திரமாகப் பார்க்கப் படுகிறது

100 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன் எக்ஸ் தளத்தில், உலகின் அதிகம் பின்தொடரும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
Advertisement