ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.2000 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு 2000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2.11 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த பேரழிவின் காரணமாக 12 மனித உயிரிழப்புகளும், 2416 குடிசை வீடுகள், 721 வீடுகள், 963 கால்நடை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ்நாட்டில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும் என்றும்,
வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 2,000 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.