ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மத்திய குழு இன்று ஆய்வு!
மத்தியக் குழுவினர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
குறிப்பிட்ட மாவட்டங்களில் தமிழக அரசு சார்பாக நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனிடையே புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழுவினர் சென்னைக்கு வருகை தந்தனர்.
இதனைதொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய குழுவினர் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது மத்திய குழுவிடம் தமிழ்நாட்டிற்கு நிவாரண தொகையாக ஆறாயிரத்து 675 கோடி ரூபாய் வழங்க பரிந்துரைக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், மத்தியக் குழுவினர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.