For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அண்ணா பல்கலை மாணவி வழக்கு : அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் - முழு விவரம்!

09:00 PM Dec 28, 2024 IST | Murugesan M
அண்ணா பல்கலை மாணவி வழக்கு   அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்   முழு விவரம்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.. சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததுடன் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் முக்கிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக, அதிமுக தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் காவல்துறை தாக்கல் செய்தது.

Advertisement

அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே தவறு இருப்பதுபோல் FIR உருவாக்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், பெண்ணின் பெயரை ஏன் வெளியிட்டீர்கள் எனவும் வினவினர்..

இதுபோன்ற காரணங்களால் மக்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வருவதற்கே பயப்படும் நிலை உள்ளதாகவும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் லட்சுமி நாராயணன் கவலை தெரிவித்தனர்.

Advertisement

வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது FIR கசிந்தது எப்படி? எனவும், முடக்கப்பட்ட பின் FIR-ஐ எப்படி மற்றவர்கள் பார்க்க முடியும் என்றும் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், IPC-யில் இருந்து BNS சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக FIR வெளியாகி விட்டதாக கூறினார்.

சிட்டிசன் போர்ட்டல் மூலம் FIR-ஐ 14 பேர் ஆன்லைனில் பார்த்துள்ளதாகவும், அவர்கள் செல்போன் எண்ணை சேகரித்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பேட்டியளித்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எல்லா குற்றச் சம்பவங்களுக்கும் பிரஸ்மீட் வைத்து காவல் ஆணையர் பதில் அளிக்கிறாரா? என வினவினர்.

காவல் ஆணையர் பேட்டி அளிக்க அனுமதி உள்ளதா? எனவும், யாரை பாதுகாக்க பேட்டி அளித்தார்? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க காவல் ஆணையர் பேட்டி அளிக்கலாம் எனவும்,

அலுவல் ரீதியாக செய்தியாளர்களை சந்திக்கலாம், தனிப்பட்ட முறையில்தான் சந்திக்க கூடாது என்றும் வாதத்தை முன்வைத்தார். தற்போதைய புலன் விசாரணையின் அடிப்படையில் ஒருவர்தான் குற்றவாளி என சென்னை காவல் ஆணையர் கூறியதாக விளக்கம் அளித்த அவர், யாரையும் பாதுகாக்கவில்லை என்பதை விளக்கவே காவல் ஆணையர் பேட்டி அளித்ததாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் எனவும், 3 காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்களை வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

வழக்கின் புலன் விசாரணையை காவல் ஆணையரின் கீழ் பணிபுரியும் அதிகாரியிடம் இருந்து மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது எனக் கூறிய நீதிபதிகள், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு இந்த விசாரணையை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரிகளான அய்வான் ஜமால், சினேகா, பிருந்தா ஆகிய மூவரின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்தது.  தொடர்ந்து, விசாரணை ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குமாறும், தமிழக டிஜிபி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்...

பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவிக்கு உரிய மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும். மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி படிப்பை தொடர்வதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது எனவும், கல்வியை முடிக்கும் வரை அவரிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டனர்.  அத்துடன் யுஜிசி நெறிமுறைகள்படி மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ளது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

Advertisement
Tags :
Advertisement