ஃபெஞ்சல் புயல் - புதுச்சேரி துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடற்கரைக்கு சுற்றலாப்பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரைக்கு வந்தவர்களை போலீசார் உடனே வெளியேற்றினர். மேலும் புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், பல இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. அதே போல், காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக வானிலை மைய கணிப்புகளுக்கு போக்கு காட்டி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால், துறைமுகத்தில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.