அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் - சிறப்பு தொகுப்பு!
தமிழகத்தில் தற்போது ஸ்கரப் டைபஸ் எனும் பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்கரப் நோயின் அறிகுறிகள் குறித்தும், அதிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டிய வழிகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.
Advertisement
ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற ஒட்டுண்ணியால் பரவும் ஸ்கரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சல் இந்தியாவில் முதன்முறையாக உத்திரப்பிரதேசத்தில் தான் கண்டறியப்பட்டது.
2021 ஆம் ஆண்டு பரவிய மர்மக் காய்ச்சல் தொடர்பான சோதனையில் ஸ்கரப் டைபஸ் காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை ஏற்படும் எனவும், உடலின் பல்வேறு இடங்களில் கருப்புக் கொப்பளங்கள் போல உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சிலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கரப் டைபஸ் என்பது பூச்சிக்கடியால் ஏற்படும் நோய் என்பதால் விவசாயத்தில் ஈடுபடுவோர் அதிகமாக இந்நோய்க்கு பாதிக்கப்படக் கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயம், புதர் நிறைந்த பகுதிகளில் இருப்பவர்கள், காடுகளில் வேலை செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒருவருக்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், ஸ்கரப் டைபஸ் நோய்த்தொற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால், டாக்ஸிசிலின், அசித்ரோமைசின், ரிஃபாம்பிசின் உள்ளிட்ட மருந்துகளை நோயாளிகளின் உடல்நிலை மற்றும் வயதுக்கு ஏற்ற வகையில் வழங்க வேண்டும் எனவும், 48 மணி முதல் 72 மணிக்குள்ளாக உடல்நிலை சீரடையவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.