அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள் : ஆசிரியர் இன்றி இயங்கும் அரசுப் பள்ளி - சிறப்பு கட்டுரை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிய மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களே இல்லாமல் இயங்கிவரும் அரசுப் பள்ளி குறித்தும், அப்பகுதி மக்கள் படும் சிரமங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலைச் சுற்றி செம்புரான்குளம், பெருங்காடு,கோம்பை, பெரும்பள்ளம், சவரிக்காடு என ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. பளியர் பழங்குடியின மக்கள் வசித்துவரும் இக்கிராமங்களில் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினால் அவசரத் தேவைக்காக மருத்துவமனை செல்ல வேண்டுமென்றால் கூட டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலை தான் இன்றளவும் நீடிக்கிறது.
அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்திருக்கும் கருவேலம்பட்டியில் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கிவரும் தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆதார் அட்டை, குடும்ப அட்டை என எந்தவித அரசு அடையாள அட்டைகளும் இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கருவேலம்பட்டி மக்களுக்கு அவ்வசதியை ஏற்படுத்தித் தருவதற்கு அரசு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் கடந்த 2020-2021ம் ஆண்டு செம்பிரான் குளம் முதல் கருவேலம்பட்டி வரை 42 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டதாக விளம்பர பலகை வைக்கப்பட்டதே தவிர சாலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மக்கள் வாழ்வதற்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு,மின்சாரம், சாலை என எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தவித்துவரும் பழங்குடியின மக்கள், அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக கவனம் செலுத்தி கொடைக்கானலை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.