அடுத்தடுத்து விபத்து - மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி சரிவு!
மேட்டூர் அனல் மின் நிலையங்களில் 1,440 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துக்களால் 210 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மற்றும் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு அனல் மின் நிலையங்களிலும் மொத்தமாக 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பழைய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று அலகுகளில் 630 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் 600 மெகா வாட் பழைய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 5 பேர் காயமடைந்தனர். இதனால் 3 மற்றும் 4ம் அலகுகளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது ஒரு அலகில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், மின் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.