அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டம்?
மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அடுத்ததாக மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தரவு சேகரிப்புக்கான செயலி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை நிர்வகிக்க ஒரு சென்சஸ் போர்டலும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கவிருப்பதாகவும், 2026-ம் ஆண்டு வரை அந்த பணிகள் தொடரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில், தற்போதுள்ள சுழற்சி மாறி அதற்கடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2035-ம் ஆண்டு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.