அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கட்டுப்பாடு - வெளியாட்கள் நடைபயணம் மேற்கொள்ள தடை!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியாட்கள் நடைபயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு பல்கலைக்கழக முதல்வர், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை பதிவாளர் அனுப்பியுள்ளார்.
அதில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் பயன்பாட்டில் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்றும், பல்கலைக்கழக மாணவிகளுக்காக POSH கமிட்டி மாதாமாதம் குறைகேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அண்ணா பல்கலை வளாகத்திற்குள் வெளி ஆட்கள் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என்றும், வெளியாட்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடைப்பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் ரோந்து பணியானது மாலை மற்றும் இரவு நேரத்தில் நடைபெற வேண்டும் என்றும், மாணவர்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வகுப்பு நேரத்தை தாண்டி அல்லது வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வகுப்பு நேரம் முடிவடைவதற்குள் பேராசிரியர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பல்கலைக்கழக முதல்வர், துறை தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.