அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் 3ம் ஆண்டு மாணவருடன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த சிலர் அந்த மாணவனை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதை தொடரந்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், கோட்டூர்புரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
மேலும் 3 தனிப்படைகள் அமைத்து பிற குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது ஞானசேகரன்தான் என்பதை வீடியோ கால் மூலமாக உறுதி செய்துள்ளார்.
இதனிடையே, போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது ஞானசேகரன் தவறி விழுந்ததில் அவருக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் , சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி சுல்தான் ஹர்ஹான் உத்தரவிட்டார்.