அண்ணா பல்கலை மாணவி வழக்கு - பாஜக, அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பாஜக, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை பதிந்த FIR கசிந்தது தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பியது.
மேலும் வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது.
அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், சென்னை காவல் ஆணையருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், அதிமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு விசாரணைக்குழுவை எதிர்த்து எவரேனும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.