தேசிய கீதத்திற்கான மரியாதை மீட்டெடுப்பது உறுதி! - ஆளுநர் மாளிகை அறிக்கை
இந்திய அரசியலமைப்பின் மேன்மையை போற்றவும் அனைத்து அரசு விழாக்களில் தேசிய கீதத்திற்கான மரியாதையை மீட்டெடுக்கவும், தமிழ் மொழியின் பெருமையை நிலைநிறுத்தவும் ஆளுநர் ரவி தனது நிலைப்பாட்டில் உறுதிக்கொண்டுள்ளார் என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு ஆளுநர் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தின் மீது தான் கொண்டுள்ள அசைக்க முடியாத மரியாதை மற்றும் போற்றுதலை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் அவர்கள் 'தமிழ்த் தாய் வாழ்த்து" பாடலின் புனிதத்தை எப்போதும் நிலைநாட்டி ஒவ்வொரு நிகழ்விலும் மரியாதையுடன் பாடி வருகிறார். உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற தமிழ் மொழி, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. ஆளுநர் இந்த புரிதல் உணர்வை முழு மனதுடன் பகிர்ந்து கொள்கிறார்.
மாநிலத்திலும் தேசிய அளவிலும் தமிழ் சுலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு ஆளுநர் பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து, அரசியல் சட்டக் கடமைகளைப் பின்பற்றுவது ஆளுநரின் கடமை. இந்திய நாட்டின் பெருமையான தேசிய கீதத்திற்கு மரியாதை அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமையாகும்.
இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் ஆளுநர் உரையின் தொடக்கம் மற்றும் முடிவில் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது.
தேசிய கீதத்திற்குரிய விதிமுறைகளின் படி இது அவசியமாகும். பலமுறை முன்கூட்டியே இதற்கான நினைவூட்டல்களை தெரிவித்த பிறகும் இந்தக் கோரிக்கைகளை வேண்டுமென்றே தமிழ்நாடு சட்டப்பேரவை புறக்கணித்துள்ளது துரதிருஷ்டவசமானது.
இன்று (06.01.2025), ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமலோ, இசைக்கப்படாமலோ இருந்தபோதும், தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு கடமைகளை மரியாதையுடன் நினைவூட்டி, முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் அவர்களை தேசிய கீதம் இசைப்பதற்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரின் கோரிக்கை திட்டவட்டமாக மறுக்கப்பட்டது.
ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது அல்லது இசைக்காமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இதனால் ஆளுநர் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
இந்திய அரசியலமைப்பின் மேன்மையை போற்றவும் அனைத்து அரசு விழாக்களில் தேசிய கீதத்திற்கான மரியாதையை மீட்டெடுக்கவும் மற்றும் தமிழ் மொழியின் பெருமையை நிலைநிறுத்தவும் தனது நிலைப்பாட்டில் ஆளுநர் உறுதிக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கபட்டுள்ளது.