அண்ணா பல்கலை மாணவி விவகாரம் - தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி கைது!
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தபோது சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினரை போலீசார் தடுத்த நிறுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையின் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக குறிப்பிட்டார்.
வள்ளுவர் கோட்டம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், தடையை மீறிய கைது செய்யப்பட்ட பாமகவினர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.