அதிகரிக்கும் காற்று மாசு : அபாய நிலையில் வட மாநிலங்கள் - சிறப்பு கட்டுரை!
தலைநகர் டெல்லியின் காற்றின் தரம் மிக மிக மோசமாகி வருகிறது. ஒரு நாளைக்கு 50 சிகரெட்டுகள் குடித்தால், உடல்நலத்தில் என்ன தீங்கு உண்டாகுமோ? அதே பாதிப்புக்களை டெல்லியின் காற்று மாசு, ஏற்படுத்துகிறது என்று மருத்துவ அறிஞர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு .
Advertisement
உலகின் மிக மோசமான காற்று மாசு கொண்ட நகரமாக டெல்லி மாறியுள்ளது. செவ்வாய் கிழமை நிலவரப்படி, டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு 492 என பதிவாகி உள்ளது. அலிபூர், ஆனந்த் விஹார், பவானா, நரேலா, பூசா மற்றும் சோனியா விஹார் போன்ற இடங்களில், காற்றுத் தரக் குறியீடு ஐந்நூறை தாண்டி இருக்கிறது. குறிப்பாக, டெல்லி காற்றின் தரம் சராசரியாக, 978 ஆக இருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது.
டெல்லியின் இந்த காற்று மாசு, சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு சமமான தீங்கை விளைவிக்கும் என்று சுவாச மற்றும் நுரையீரல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாசு மிகுந்த காற்று, நுரையீரலில் ஆழமாக சென்று ரத்த ஓட்டத்தில் கலக்கின்றது.
இந்த காற்றின் மாசால், இருமல், மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டு, நாளடைவில், ஆஸ்துமா, நுரையீரல்பாதிப்பு, இதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களும் ஏற்படுகின்றன.
டெல்லியில், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், மட்டுமல்லாமல், அனைத்து மக்களும் இத்தகைய உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதில் பாதிப்படைகின்றனர். டெல்லியின் அண்டை மாநிலமான ஹரியானாவில் காற்றின் தரக் குறியீடு 631 ஆக பதிவாகியுள்ளது. இது ஒரு நாளைக்கு 34 சிகரெட்டுகள் புகைப்பதற்குச் சமமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் காற்றின் தரக் குறியீடு 237 என பதியாகியுள்ளது. இது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 12 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமமான தீங்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பஞ்சாபில் காற்றின் தரக் குறியீடு 233 ஆக பதிவாகி உள்ளது. இது ஒரு நாளைக்கு 9 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த மாநிலங்கள் மட்டுமின்றி, பெரும்பாலான வடமாநிலங்களில் காற்றின் தரம் மிக மோசமாகவே உள்ளன. பார்க்கப் பனி மூட்டம் மாதிரி தெரிந்தாலும், காற்றின் மாசுபாட்டால், சில மீட்டர் தூரத்தில், என்ன இருக்கிறது என்று தெரியாத நிலைமை தான் உள்ளது.
அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வது குறைந்து வருகிறது. இதனால், டெல்லி மட்டுமின்றி, நொய்டா, குர்காவன், லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள மால்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
பாதுகாப்பான காற்றின் தரத்தை பராமரிக்க மால்கள் மேம்பட்ட வடிகட்டுதல் அமைப்புகளைச் செயல்படுத்தியுள்ளன. வார இறுதி முன்பதிவு மற்றும் வெளிப்புற நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பணவீக்கத்தில் சிக்கித் தவிக்கும் உணவுச் சேவைத் துறை, மேலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
கடுமையான வெப்பம், பெரிய திரைப்பட வெளியாகாதது, பல மாதங்கள் நீடித்த நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றால் சரிவைக் கண்ட மால்கள் இப்போது காற்றின் மாசால், மேலும் பாதிப்படைந்துள்ளன. தரவு நுண்ணறிவு நிறுவனமான ஜியோஐக்யூவின் தகவல் படி, 30 மால்களில், 10 மால்கள் மட்டுமே சராசரி தினசரி வருகையை அதிகரித்துள்ளன.
பொதுவாக, ஒரு ஷாப்பிங் மாலுக்கு 100 பேர் வந்தால், சுமார் 40 பேர் வரை மல்டிபிளக்ஸ் சென்று திரைப்படம் பார்ப்பதுண்டு. இப்போது மல்டிபிளக்ஸ்களில் மக்கள் வருகை கடுமையாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, முடிந்த காலாண்டில் PVR INOX நிறுவனப் பங்கு விலை சரிந்துள்ளது.
தலைநகர் டெல்லி உட்பட, வட மாநிலங்களில் , காற்றின் மாசு, மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. இதற்கிடையே, காற்று மாசு பாட்டைத் தடுக்க, செயற்கை மழை மட்டுமே ஒரே வழி என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.