தமிழகத்தில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ. 65 கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கு சுமார் 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி - பள்ளிப்பட்டு வழித்தடத்திலும், திருப்பாசூர்- கொண்டச்சேரி வழித்தடத்திலும் உயர்மட்ட பாலங்கள் அமைக்க 22 கோடியே 57 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடமாதிமங்கலம்- கொம்மனந்தல், அம்மாபாளையம் - புதுபாளையம், வீரளுர் - செங்கம் ஆகிய வழித்தடங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க 30 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூர் ரயில்வே ஃபீடர் சாலையில் தற்போதுள்ள தரைப்பாலத்தை மாற்றி உயர்மட்ட பாலம் அமைக்க 12 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுவதன் மூலம் இந்த பகுதிகளில் போக்குவரத்து மேம்படும் என்றும் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.