அதிமுகவில் பணியாற்றாத நிர்வாகிகளுக்கு கல்தா : களையெடுக்கும் இ.பி.எஸ் - சிறப்பு தொகுப்பு!
அதிமுகவில் சரிவர கட்சிப் பணியாற்றாத நிர்வாகிகளை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு புதியவர்களுக்கு பதவி வழங்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கள ஆய்வுக்குழு தொடர்பாகவும், அதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் குறித்தும் BEHIND THE NEWS பகுதியில் பார்க்கலாம்.
அதிமுகவோட கிளை, வார்டு, வட்டம், சார்பு அணிகளோட வேலைகளையும், செயல்பாடுகளையும் ஆராய்ஞ்சு, அதை மேம்படுத்துறதுக்கான கருத்துக்களை கேட்குறதுக்காக கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணினு பத்து பேர் கொண்ட கள ஆய்வுக்குழுவ அமைச்சுருக்காரு அதிமுகவோட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக அமைப்பு ரீதியா செயல்பட்டு வர அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியா போய் அங்க இருக்க நிர்வாகிகளை சந்திச்சு அவங்க சொல்ற கருத்துக்களை டிசம்பர் 7 ஆம் தேதிக்குள்ள அறிக்கையா தாக்கல் பண்ணனும்னு அவர் உத்தரவு போட்டுருக்காரு.
அதிமுக மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழுவுக்கு கள ஆய்வுக்குழுனு பேர் வச்சுருந்தாலும், இந்த குழுவோட வேலை என்னவோ களை எடுக்குறது தானு கட்சிக்குள்ளயே பரவலா பேசப்படுது. அதிமுகவுல கிளைச் செயலாளர்கள்ல இருந்து மாவட்டச் செயலாளர்கள் வரை பலர் கட்சி வேலையை சரியா செய்றதே இல்லனு புகார் வந்த அடிப்படையிலதான் இந்த குழுவே அமைக்கப்பட்டுருக்கு.
கள ஆய்வுக்குழு நடத்துற ஆய்வுல வேலை செய்யாத நிர்வாகிகள், எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவங்களை தூக்கிட்டு வேலை செய்ற ஆட்களுக்கு பதவி கொடுக்கனும்ங்குறதுல உறுதியா இருக்கும் எடப்பாடி பழனிசாமி, கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துலயும் இதை தெளிபடுத்தியிருக்காராம்.
டிசம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுவ கூட்டுறதுக்கு முடிவு செஞ்சுருக்க அதிமுக தலைமை, அதுக்கு முன்னாடியே உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்கிறதுக்கும் தயாராகிட்டு இருக்கு.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரா எடப்பாடி பழனிசாமியும் இருந்த காலகட்டமான 2022ல நடந்த உட்கட்சித் தேர்தலோட பதவிக்காலம் 2027வரை இருந்தாலும் கூட, அதை கலைச்சுட்டு மறுபடியும் தேர்தல் நடத்தி அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தான், அதுவும் நான் தான் அப்படிங்கிறத சொல்றதுக்காகவே இந்த தேர்தலை நடத்த திட்டமிட்டிருக்காரு எடப்பாடி பழனிசாமி.
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் படம் போட்டுருந்த உறுப்பினர் அட்டைக்கு பதிலா, இ.பி.எஸ் படம் மட்டும் போட்டு அச்சடிக்கப்பட்டுருக்க புதிய உறுப்பினர் அட்டை எல்லாருக்கும் போய் சேர்ந்துருக்கு.
பொதுக்குழுவுக்கு முன்னாடியே உட்கட்சித் தேர்தலை நடத்தி, அதில் தேர்ந்தெடுக்கப்படுற நிர்வாகிகளுக்கும், பொதுக்குழுவுலயே ஒப்புதலும் வழங்கிட்டா, நீதிமன்ற வழக்குகளில் பிரச்னை இருக்காது அப்படிங்கிறதால இந்த முடிவை எடுத்துருக்கு அதிமுக தலைமை.
அதே நேரத்துல ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலும் சீக்கிரமே நடக்கும்னு எதிர்பார்க்குற நிலையில, அதுக்கு முன்னாடியே உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிச்சுட்டா, அதன் மூலமா உள்ளாட்சித் தேர்தலையும் சிறப்பான முறையில எதிர்கொள்ள முடியும்னு சொல்றாங்க அக்கட்சியோட மூத்த நிர்வாகிங்க. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமா அமைஞ்சுருக்க உள்ளாட்சித் தேர்தல்ல அதிகளவிலான இடங்கள்ல ஜெயிக்கிறதுக்கான வேலைகளை இப்பவே ஆரம்பிங்கனு மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு போட்டுருக்காரு.
அதிமுக பொதுச்செயலாளரா எடப்பாடி பழனிசாமி தேர்வானதுக்கு பின்னாடி நடந்த எல்லாத் தேர்தல்களையும் அதிமுக தோல்வியடைஞ்சுட்டு வரது கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒருவித சோர்வை ஏற்படுத்தியிருக்கு. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியிருக்க நடிகர் விஜய், அரசியல் களத்துல இருந்து அதிமுகவை ஓரங்கட்டிவிட்டு திமுக Vs தவெக அப்படிங்கிற சூழலையும் உருவாக்க முயற்சி பண்ணிட்டு இருக்காரு. கள ஆய்வுக்குழு சமர்பிக்கிற அறிக்கையை மையமா வச்சு, சோர்வா இருக்க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை உற்சாகப்படுத்துறதுக்காக மாவட்டவாரியா சுற்றுப்பயணம் போறதுக்கும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுருக்காரு.
அதிமுக கூட்டணியில தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகளும் இருக்கும் நிலையில, மேலும் பல கட்சிகளையும் அதிமுக கூட்டணியில இணைக்குறதுக்கான நடவடிக்கைகளும் தீவிரமா தொடங்கியிருக்கு.
திமுக ஆட்சியில நடந்துட்டுருக்க சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருள் தாராளப்புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மட்டுமில்லாம பொதுமக்கள் சந்திக்கிற சின்னச் சின்ன பிரச்னைகளுக்கும் மாவட்ட அளவுல போராட்டங்களை நடத்தனும்னு எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கதா தகவல் வெளியாகியிருக்கு.
இது தவிர்த்து, செயல்படாத நிர்வாகிகள் களையெடுப்பு , புதிய நிர்வாகிகள் நியமனம், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பொறுப்புனு அடுத்தடுத்த அதிரடி முடிவுகளை எடுக்க தயாராகிட்டுருக்க எடப்பாடி பழனிசாமிக்கும், அவரோட பதவியை தக்க வைக்கிறதுக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் ரெம்ப முக்கியமான தேர்தலா அமையும்னு பேசிக்கிறாங்க அரசியல் விமர்சகர்கள்.