வேங்கைவயல் சம்பவம் : அவமானத்தின் 2-ம் ஆண்டு - சிறப்பு தொகுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளை கடந்தும் குற்றவாளிகள் ஒருவர் கூட கைதுசெய்யப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வின் வழக்கை காவல்துறை அலட்சியமாக மேற்கொண்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலம் கலந்த குடிநீரை அருந்திய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இன்றுடன் இரண்டாண்டுகள் முடிவடைந்திருக்கிறது.
இருப்பினும் மனித நாகரீகமற்ற இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படாமல் இருப்பது புதுக்கோட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட புலனாய்வுக்குழு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலிசாருக்கு மாற்றப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நேரில் விசாரணை, டி என் ஏ பரிசோதனை, உண்மை கண்டறியும் சோதனை என அனைத்து விதமான சோதனைகளும் நடைபெற்ற பின்னரும் ஒரு குற்றவாளி கூட இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லையா ? அல்லது குற்றவாளிகள் யாரென்று தெரிந்தும் காவல்துறை கைது செய்ய மறுக்கிறதா என்ற கேள்வியையையும் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் எழுப்புகின்றனர்.
ஸ்காட்லாந்துக்கு இணையான காவல்துறையை வைத்திருப்பதாக முதலமைச்சர் கூறும் நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளை இரண்டு ஆண்டுகள் கடந்தும் கைது செய்யாமல் இருப்பது ஏன் எனவும் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்
வேங்கைவயல் விவகாரத்தில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, பயங்கரவாத்தை கையாண்டிருக்கும் குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.