அதிமுக பொதுச் செயலாள தேர்வு குறித்த விசாரணை - உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என முன்னாள் எம்பி ரவீந்திரநாத் மற்றும் கேசி பழனிசாமி ஆகியோர் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கட்சியில் உறுப்பினராக இல்லாத நபர்களின் கருத்துக்களை ஏற்ககூடாது எனவும், இதனை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என கூறி தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், வரும் 27 -ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.