அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை நடத்த வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
Advertisement
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க, மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளை மீறியும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் ஆலை செயல்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளதாகவும், பட்டாசு ஆலைகளில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை நடத்துமாறு, திமுக அரசை வலியுறுத்தியிருந்தும், இது தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனியும் தாமதிக்காமல், அனைத்து பட்டாசு ஆலைகளிலும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்று சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க, திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.