அபார வளர்ச்சி : இந்திய ரயில்வேயின் நவீன சாதனைகள் - சிறப்பு தொகுப்பு!
கடந்த ஆண்டு இந்திய ரயில்வே பல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் படைத்திருக்கிறது. கூடவே பல சவால்களையும் சந்தித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாகவும், உயிர்நாடியாகவும் இந்திய இரயில்வே விளங்குகிறது. முழு தேசத்தையும் உள்ளடக்கிய பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்களை இணைக்கும் இந்திய ரயில்வே, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக உலகில் நான்காவது பெரிய ரயில்வே அமைப்பாக உள்ளது.
2024-25 மத்திய பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு 2.55 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது முந்தைய ஆண்டின் நிதி ஒதுக்கீட்டை விட 5.85 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய பட்ஜெட் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 8 ரயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 865 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 62 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள், நான்கு அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் மற்றும் நாட்டின் முதல் நமோ பாரத் விரைவு ரயில் சேவை கடந்த ஆண்டு செயல்படுத்தப் பட்டுள்ளன.
காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையே 3433 கிலோமீட்டர் நேரடி இரயில் இணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு (USBRL) திட்டத்தின் இறுதிப் பாதை பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தன.
செனாப் ஆற்ற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இதுவாகும். பிரான்சின் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும்.
இந்த ரயில் பாதையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், இந்த ஜனவரியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் காஷ்மீரை நேரடியாக புது டெல்லிக்கு இணைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
இதே போல், நாட்டின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை கொல்கத்தா மற்றும் ஹவுரா இடையே தொடங்கப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை வெறும் 45 வினாடிகளில் கடந்து செல்கிறது.
351 ஏக்கர் பரப்பளவில் லத்தூரில் உள்ள மராத்வாடா ரயில் பெட்டி தொழிற்சாலை கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இந்த தொழிற்சாலை வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இந்தியாவின் ரயில் உற்பத்தி திறன்களை மேம்படுத்துகிறது.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், 6,200 ட்ராக் கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. மேலும், 6,450 கிலோமீட்டர் முக்கிய பாதைகளுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட 1337 ரயில் நிலையங்களில் 1198 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டியின் முதல் முன்மாதிரி வெளியிடப்பட்டன. விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024ம் ஆண்டு முதல் குரூப் 'சி' பதவிகளின் பல்வேறு பிரிவுகளுக்கு பணி வழங்குவதற்கான வருடாந்திர அட்டவணையை வெளியிடும் முறையை இந்திய இரயில்வே முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது .
போதிய மனிதவளம் இல்லாததால், பிரச்சனை மிகவும் தீவிரமானது என்று கூறியுள்ள ரயில்வே வாரியத் தலைவர் சதீஷ் குமார், பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியப் பிரிவுகளில் அரசிதழ் அல்லாத பதவிகளை உருவாக்கும் அதிகாரத்தை வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு, இத்தனை சாதனைகளை இந்திய இரயில்வே செய்திருந்தாலும், உத்தரபிரதேசத்தில், ஜார்க்கண்டில் ரயில் விபத்துக்கள் நடந்து பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சவாலை சமாளிக்க,
தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான கவாச் 4.0-ஐ சுமார் 10,000 இன்ஜின்களில் பொருத்துவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதிக்காத வழித்தடங்களில் ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களின் அறிமுகம் இந்தியாவில் ரயில் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த இந்தியா தயாராக உள்ளது. மேலும், 8 பாரம்பரிய வழித்தடங்களில் 35 ஹைட்ரஜனில் இயங்கும் இரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா போன்ற சர்வதேச சந்தைகளை இலக்காகக் கொண்டு அடுத்த ஆண்டுக்குள் செமி அதிவேக 'வந்தே பாரத்' ரயில்களை சந்தைப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.