அமெரிக்காவின் புதிய GREEN CARD கொள்கை : இந்தியர்களுக்கு ஜாக்பாட்? - சிறப்பு தொகுப்பு!
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களிடையே புதிய குடியேற்ற கொள்கைகள் தொடர்பாக பெரும் கருத்து மோதல் உருவாகியுள்ளது. புதிய குடியேற்றக் கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணனின் நியமனமே குடியரசு கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட காரணம் என்று தெரியவந்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
Advertisement
அமெரிக்காவின் முன்னணி ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்களில் ஒருவரும், தொழில் நுட்ப வல்லுனர்களில் ஒருவருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை கடந்த வாரம் அமெரிக்க அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான மூத்த கொள்கை ஆலோசகராக டிரம்ப் நியமித்தார். ஸ்ரீ ராம் கிருஷ்ணன், அமெரிக்காவின் குடியேற்றச் சீர்திருத்தங்களை வடிவமைப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாகவே திறமை அடிப்படையிலான குடியேற்றச் சீர்திருத்தங்களை ஸ்ரீராம் கிருஷ்ணன் வலியுறுத்தி வருகிறார். குறிப்பாக, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் திறமையானவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீராம் கிருஷ்ணன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம் H1B விசாவில் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது தான் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக, வலதுசாரி அமைப்புகளின் முக்கிய பிரமுகரான லாரா லூமர், ஸ்ரீ ராம்கிருஷ்ணனின் நியமனத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப்பின் "AMERICA FIRST" என்ற கொள்கைக்கு எதிராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றச்சாட்டியுள்ளார். கூடுதலாக, கிரீன் கார்டு வழங்கும் போது நாடு சார்ந்த வரம்புகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்ரீராம் கிருஷ்ணன் செய்த பதிவையும் லாரா லூமர் பகிர்ந்திருக்கிறார்.
கிரீன் கார்டு வழங்கும் போது நாடு சார்ந்த வரம்புகளை நீக்கினால் அமெரிக்க STEM பட்டதாரிகளின் நலன்கள் நேரடியாக பாதிக்கும் என்றும், உள்நாட்டு வேலைவாய்ப்பு சந்தைக்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் என்றும் லாரா லூமர் கூறியுள்ளார்.
புதிய குடியேற்றக் கொள்கைகளால், அமெரிக்க தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று லாரா லூமரின் இந்தப் பதிவு, சமூக ஊடகங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், லாரா லூமரின் விமர்சனங்களுக்கு, எலான் மஸ்க், அமெரிக்கா வெற்றி பெற வேண்டுமா தோற்க வேண்டுமா? என்றும், உலகின் தலைசிறந்த திறமைசாலிகளை விட்டுவிட்டால், கட்டாயப்படுத்தினால், அமெரிக்கா தோற்றுவிடும் என்றும் ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
இதே கருத்தை அரசாங்கச் செயல் திறன் துறையின் (DOGE) தலைவரான விவேக் ராமசாமி, ஏற்கெனவே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியின் கருத்துக்கள், இனவாதத்தை முன்வைக்கும் MAKE AMERICA GREAT AGAIN (MAGA) ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதுபோலவே, அரசின் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிரிப்டோகரன்சி கொள்கை பிரிவின் தலைவரான டேவிட் சாக்ஸ், கிரீன் கார்டு மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என ஸ்ரீராம் கூறவில்லை என்றும், நாடு சார்ந்த வரம்பை மட்டுமே நீக்க வேண்டும் என கூறுகிறார் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதாவது, அமெரிக்க அரசு தற்போது உலகின் அனைத்து நாடுகளும் ஓரே எண்ணிக்கையிலான கிரீன் கார்டுகளை வழங்கி வருகிறது. தகுதியான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு நாட்டுக்கும் சமமான எண்ணிக்கையிலான கிரீன் கார்டுகளே ஒதுக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற வெளிநாட்டினருக்கு கிரீன் கார்டு வழங்கவிருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், குடியேற்ற கொள்கை தொடர்பாக மாகாவுக்கும் புதிய டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் மோதல் தீவிரமாகியுள்ளது. மேலும், டிரம்ப் அதிகமாக இடதுசாரி கொள்கையாளர்களையே முக்கிய பொறுப்புகளில் நியமிப்பதால், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் ட்ரம்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.