For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

செந்தில் தொண்டமான் காளைகளுக்கு புதுவித பயிற்சி : பாய்ச்சலுக்கு தயார் - சிறப்பு தொகுப்பு!

09:00 PM Jan 05, 2025 IST | Murugesan M
செந்தில் தொண்டமான் காளைகளுக்கு புதுவித பயிற்சி   பாய்ச்சலுக்கு தயார்   சிறப்பு தொகுப்பு

ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்துச் செல்ல நவீன ஹைட்ராலிக் வாகனம், பிரத்யேக பயிற்சி என தனது காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்கு முழு வீச்சில் தயார் செய்து வருகிறார் முன்னாள் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு இலங்கையில் பல்வேறு அதிகார மட்டத்தில் பதவிகளை வகித்தவர், தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவரான செந்தில் தொண்டமான். தமிழர் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுப்பதில் செந்தில் தொண்டமான் ஆற்றிய பங்களிப்பு ஏராளம்.

Advertisement

புல்லட் காளை, கேஜிஎஃப் காளை, கரிகாலன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தலைசிறந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சொந்தக்காரரான இவர், சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில், தனக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

பயிற்சி என்றால் சாதாரண பயிற்சி அல்ல, ஒவ்வொரு காளைக்கும் தனி அறை, லைட், ஃபேன், கால்நடை மருத்துவர் வழிகாட்டுதலின் படி பேரிச்சம்பழம், பருத்தி விதை, கோதுமை தவிடு உள்ளிட்ட சத்தான உணவுகள், சீரான இடைவேளையில் மருத்துவ பரிசோதனை , நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஆள்குத்து பயிற்சி போன்றவை வழங்கி காளைகளை போட்டிக்கு தயார் செய்து வருகிறார்.

Advertisement

பிடிக்க நினைப்பவர்களை கண்டாலே முட்ட பாயும் இந்த காளைகள் அனைத்துமே, தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வாரிக்குவித்துள்ளன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கூடுதலாக 6 முரட்டு காளைகளை வாங்கியுள்ள செந்தில் தொண்டமான், அவற்றுக்கும் மற்ற காளைகளுடன் சேர்த்து சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டில் புதுப்புது யுக்திகளை கையாள்வதை வழக்கமாக கொண்ட செந்தில் தொண்டமான், இந்த ஆண்டும் தனது காளைகளுக்கு பயிற்சி அளிக்க புதிய யுக்தி ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில், வாடிவாசலில் வீரர்கள் எத்திசையில் இருந்து வந்தாலும் அவர்களிடம் பிடிபடாமல் தப்ப, டம்மி எனப்படும் மனித உருவ பொம்மைகளை பயன்படுத்தி காளைகளுக்கு ஆள்குத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்றொருபுறம் செந்தில் தொண்டமான் பெயரில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களமிறங்கவுள்ள மாடுபிடி வீரர்களுக்கும், இங்கு சத்தான உணவுடன் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பே தனது காளைகளை வாடிக்கு அழைத்துச் செல்ல ஏசி வசதியுடன் கூடிய கேரவனை அறிமுகப்படுத்திய செந்தில் தொண்டமான், இம்முறை காளைகளை மூன்று புறங்களில் இருந்தும் ஏற்றி, இறக்க வசதியாக அதி நவீன ஹைட்ராலிக் வாகனங்களை களமிறக்கியுள்ளார்.

சகல வசதிகளுடன் பராமரிக்கப்பட்டு, சிறந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு களமிறக்கப்படவுள்ள இந்த காளைகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Tags :
Advertisement