அமெரிக்காவில் காட்டு தீ : தீயணைப்பு பணியில் கடல் நீரை பயன்படுத்துவதில் சவால் - சிறப்பு தொகுப்பு!
அமெரிக்காவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அந்த பணிக்காக கடல்நீரை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள் வல்லுநர்கள்....அதுதொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்......
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. கலிபோர்னிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்தத்தீ மேலும் பரவும் அபாயம் உள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போதைய நிலையை
போர்ச்சூழலுக்கு நிகராக ஒப்பிட்டுள்ளார்.
36 ஆயிரத்து 386 ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதற்காக தீயணைப்பு வீரர்களுடன் சிறைக் கைதிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாததால் தீயை அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலுக்கு அருகிலேயே லாஸ் ஏஞ்செல்ஸ் இருக்கும் போது, தீயணைப்பு பணிகளுக்கு கடல் நீரை பயன்படுத்தினால், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமே என்று தோன்றலாம். ஆனால் அவ்வாறு செய்வதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள் வல்லுநர்கள்.
அதிக உப்புத்தன்மை கொண்ட கடல்நீர் தீயை அணைப்பதற்கு பயன்படுத்தப்படும் விமானங்கள், தண்ணீர் பம்புகள் போன்றவற்றில் சேதத்தை ஏற்படுத்திவிடும். மேலும் தீயைக் கட்டுப்படுத்துவதில் நன்னீர் அளவுக்கு கடல் நீர் செயல்படாது.
அதே போல் உப்புத் தண்ணீரில் மின்சாரத்தை கடத்தும் திறன் அதிகமாக இருக்கும். அது தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிவிடும்.
மற்றொருபுறம் தீயணைப்புக்காக உப்புத் தண்ணீரை பயன்படுத்தும்போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். அதிகளவிலான கடல் நீர் பூமியில் ஊடுருவும் போது மண்ணின் தன்மை கெட்டு விவசாயம் பாதிக்கப்படும். மேலும் தீயை அணைக்கும்போது கடல் தண்ணீர் கலந்து நீர்நிலைகளின் தரம் கெடும்.
இப்படி பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இக்கட்டான சமயங்களில் மட்டும் கடல் நீரைக் கொண்டு தீயணைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். அதற்காக சிறப்பு TANK-களைக் கொண்ட விமானங்களை பயன்படுத்துவார்கள்.
இத்தகைய சூழலில் பேரிடர் மேலாண்மையில் புதுமைகளை புகுத்த வேண்டியதன் அவசியத்தை லாஸ் ஏஞ்செல்ஸ் காட்டுத்தீ உணர்த்தியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள அரசு, தனியார் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.