அமெரிக்காவில் தெலுங்கானா மாணவர் சுட்டுக்கொலை!
தெலுங்கானாவை சேர்ந்த மாணவர் அமெரிக்காவின் சிகாகோவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த கோட்டேஷ் வார் ராவ்-வின் மகன் சாய் தேஜா, முதுநிலை படிப்புக்காக அமெரிக்காவின் சிகாகோவுக்கு சென்றார். அங்கு படிப்பை தொடர்ந்துகொண்டே பகுதி நேரமாக கடை ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம்போல அவர் கடையில் இருந்தபோது அங்கு துப்பாக்கியுடன் வந்த சிலர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சாய் தேஜா கடையில் இருந்த பணத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் அந்நபர்கள் கண்மூடித்தனமாக சாய் தேஜாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.