அமெரிக்க தேர்தல் : அபார வெற்றி பெற்ற "சமோசா காகஸ்" - சிறப்பு கட்டுரை!
அமெரிக்க தேர்தலில், அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால் மற்றும் ஸ்ரீ தானேதர் மற்றும் சுஹாஸ் சுப்ரமணியம் ஆகிய ஆறு இந்திய அமெரிக்கர்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
"சமோசா காகஸ்" என்பது அமெரிக்க காங்கிரஸில் உள்ள இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறிக்கும் ஒரு சொல்லாட்சியாகும்.
தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த, குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த வார்த்தை எடுத்துக்காட்டுகிறது. 2018ம் ஆண்டு இல்லினாய்ஸை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற இந்திய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரால் "சமோசா காகஸ்" என்ற சொல் உருவாக்கப்பட்டது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை தேர்தலில் வர்ஜீனியா மாகாண செனட்டரான சுஹாஸ் சுப்ரமணியம், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்திருக்கிறார்.
தென்னிந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட சுஹாஸின் தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவராவார். சுஹாஸின் அம்மாவின் சொந்த ஊர் கர்நாடகா ஆகும். முன்னாள் அதிபர் ஒபாமாவின் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராகப் பணியாற்றிய சுஹாஸ் சுப்ரமணியம், 2019ம் ஆண்டு வர்ஜீனியா மாகாணத்தின் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த முறை பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்ட சுஹாஸ் சுப்ரமணியம், பொருளாதாரம், சட்டரீதியாக குடியேறியவர்களுக்கான உரிமை போன்ற முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மிச்சிகனின் 13வது மாவட்டத்தில் இருந்து ஸ்ரீ தானேதர் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், இல்லினாய்ஸின் 8-வது மாவட்டத்திலிருந்து ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கலிபோர்னியாவின் ஆறாவது மாவட்டத்தில் இருந்து ஏழாவது முறையாக இந்திய அமெரிக்க காங்கிரஸின் மூத்த உறுப்பினரான டாக்டர் அமி பெராவும், வாஷிங்டனின் ஏழாவது மாவட்டத்தில் இருந்து பிரமிளா ஜெயபாலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
கலிபோர்னியாவின் 17வது மாவட்டத்தில் இருந்து இந்திய அமெரிக்கரான ரோ கன்னா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் அனிதா சென்னை மிக எளிதாக தோற்கடித்து, மீண்டும் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
சுமார் கால் நூற்றாண்டாக, சிலிக்கான் பள்ளத்தாக்கின் பெரும்பகுதியை உள்ளடக்கிய கலிபோர்னியாவின் 17வது மாவட்டம், முக்கியமான தொழில்நுட்ப மையமாக விளங்குகிறது.
பொருளாதாரம் மற்றும் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய ரோ கன்னா, முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் வர்த்தகத் துறை துணைச் செயலாளராக பணியாற்றியுள்ளார். ரோ கன்னா, அமெரிக்க உற்பத்தி மற்றும் பசுமைத் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் பெரும் பங்காற்றியுள்ளார்.
சுற்றுச்சூழலுக்கான மேற்பார்வை துணைக்குழுவின் தலைவராக இருந்த ரோ கன்னா, தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி உற்பத்தியில் அமெரிக்காவின் சிறப்பு மசோதாவான CHIPS மற்றும் Science Act க்கான அடித்தளமாக அமைந்த Endless Frontier Act சட்ட தயாரிப்பில் பணியாற்றி இருக்கிறார்.
இந்தியா உட்பட தெற்காசிய வேர்களைக் கொண்டுள்ள சமோசா காகஸ் உறுப்பினர்கள், அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.
இந்திய-அமெரிக்க சமூகத்துக்கான முக்கியமான பிரச்சினைகள் மற்றும் தெற்காசியப் பகுதிகளைப் பாதிக்கும் விஷயங்களில் சரியான முடிவெடுப்பதில் இந்த சமோசா காகஸ் உறுப்பினர்கள் அமெரிக்க அரசுக்கு பெரிதும் உதவுகிறார்கள்.