அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சிறப்பு தொகுப்பு!
அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என காளையர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமே உலக அளவில் புகழ்பெற்றதாக விளங்குகிறது.
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் களையிழந்து காணப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்க வேண்டிய உள்ளூர் காளைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பது காளை உரிமையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களின் காளைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டதால் உள்ளூர் காளைகளுக்கு இறுதி நேரத்தில் களமிறங்குவதற்கான வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தங்களின் காளைகளை தயார்படுத்தி மிகுந்த எதிர்பார்ப்போடு வரும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ஜல்லிக்கட்டு கமிட்டியின் கட்டுப்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து காளைகளுக்கும் களம் காண அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு சில ஆண்டுகள் மட்டுமே ஆன்லைனில் டோக்கன் பெறும் நடைமுறையை கொண்டு வந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக காளை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளியூர்களை சேர்ந்த காளைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும், உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்காமல் புறக்கணிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டியை தொடர் போராட்டத்தின் மூலம் மீட்டெடுத்தவர்களுக்கு அதனை பார்க்க கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநில மக்களும் விரும்பி வந்து பார்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை முறையாக செய்யாத காரணத்தினால் அதனை காணவந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக அரசியல் தலையீடுகளால் அதன் தனித்தன்மையை இழந்து வருவதாக காளைகளின் உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அகில உலகமே போற்றி பாராட்டும் வகையில் நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, விழாக் கமிட்டியின் அலட்சியமான ஏற்பாடுகளால் நடப்பாண்டில் அலங்கோலமாக நிறைவடைந்திருக்கிறது. அடுத்த ஆண்டாவது அரசியல் தலையீடுகள் இன்றி ஜல்லிகட்டு போட்டியை நடத்த முன்வரவேண்டும் என மதுரை மாநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.