அரசு உதவி பெறும் பள்ளியில் பெற்றோர் - மாணவர்களிடையே மோதல்!
மதுரையில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவனின் உறவினர்களும், சக மாணவர்களும் தலைமை ஆசிரியை முன்பே மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனை சக மாணவர்கள் கேலி செய்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியையிடம் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியை சம்மந்தப்பட்ட மாணவர்களை தனது அறைக்கு அழைத்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 12-ம் வகுப்பு மாணவனின் உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்குமிடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. தலைமை ஆசிரியை அவர்களை சமாதானம் செய்ய முயன்றும், அதை மீறி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவனின் உறவினர்களும், சக மாணவர்களும் மோதிக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாகியுள்ளது.