அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு ரத்து! : டிஎன்பிஎஸ்சி
கடந்த 14-ம் தேதி நடைபெற்ற அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Advertisement
குற்றவழக்கு தொடர்பு துறையில் 2ஆம் நிலை உதவி வழக்கு நடத்துநர் பணிக்கான அறிவிப்பு, கடந்த செப்டம்பர் 13-ம் தேதி வெளியானது.
இதற்கான கணினிவழித் தேர்வு கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட நிலையில் 4,186 பேர் பங்கேற்றனர். சில தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாறால் தேர்வை முழுமையாக முடிக்க முடியாததால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனை ஏற்று கடந்த 14-ம் தேதி நடைபெற்ற கணினி வழித் தேர்வை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மறுதேர்வு பிப்ரவரி 22-ம் தேதி OMR முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.