அரபு நாடுகளிலும் ஆதிக்கம்! : போட்டு தாக்கும் மோடி குவைத்தில் சாதித்து என்ன?
43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொண்ட முதல் குவைத் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாறியுள்ளது. இந்தியா-குவைத் உறவுகளின் வளர்ந்து வரும் வலிமையை பிரதமர் மோடியின் குவைத் பயணம் எடுத்துக் காட்டுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
குவைத்தில் எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையே கடல்வழி வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது.
வரலாற்று ரீதியாக, இரு நாடுகளும் நல்ல நட்புறவைக் கொண்டிருந்தன. 1961ம் ஆண்டு வரை குவைத்தில் இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட்டது. அதே ஆண்டில்,
இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையிலான தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, குவைத்தில் வர்த்தக ஆணையரை இந்தியா நியமித்தது.
இந்த ஆண்டு, குவைத் வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்திய பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக, GCC எனப்படும் வளைகுடா ஒத்துழைப்பு ஆணையமும் நிறுவப்பட்டது. இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் ஆறில் ஒரு பங்கை ஜிசிசி வைத்திருக்கிறது.
பிரதமர் மோதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சர்வதேச அரங்கில் இந்தியாவின் அடையாளத்தை உயர்த்த பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறார். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகள் மீது பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த குவைத் பயணம், அரபு நாடுகளுக்குப் பிரதமர் மோடி மேற்கொள்ளும் 14வது பயணமாகும். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏழு முறையும், கத்தார் மற்றும் சவூதி அரேபியாவுக்கு முறையே இரண்டு முறையும், ஓமன் மற்றும் பஹ்ரைனுக்கு முறையே ஒரு முறையும் பிரதமர் மோடி சென்றுள்ளார்.
தற்போதைய குவைத் பயணத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட அனைத்து முக்கிய அரபு நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
உலக அரசியலின் மாறிவரும் தன்மைக்கேற்ப இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பிரதமர் மாற்றி அமைத்துவிட்டார் என்றே அரசியல் வல்லுநர்கள் பாராட்டுகிறார்கள்.
மத்திய கிழக்கு நாடுகள் உடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்துவதற்கு அந்நாடுகளில் வாழும் இந்திய மக்கள் தொகை அதிகம் என்பதுதான் முக்கியக் காரணமாகும்.
குவைத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 35 லட்சம் இந்தியர்களும், சவூதி அரேபியாவில் சுமார் 26 லட்சம் இந்தியர்களும் உள்ளனர்.
குவைத்தில் வாழும் வெளிநாட்டவர்களில் இந்தியர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் இந்தியர்கள் ஆவார்கள். குவைத்தில், பணிபுரியும் ஊழியர்களில் 30 சதவீதம் இந்தியர்களே உள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு அதிக அளவில் பணம் அனுப்புகின்றனர். குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் ஆண்டுதோறும் சுமார் 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இது இந்தியாவுக்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மொத்த வருமானத்தில் 6.7 சதவீதமாகும். இந்த மக்களை இணைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார் என்பதே உண்மையாகும்.
கடந்த ஜூன் மாதம் தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இந்த பயணத்தின் போது, குவைத் இந்திய தொழிலாளர்களைச் சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இது வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தொழிலாளர்களின் நலனுக்காக பிரதமர் அளித்த முக்கியத்துவத்தின் அடையாளமாகும்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினாலும், இந்தியா, தனது எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய அரபு நாடுகளைச் சார்ந்துள்ளது. எனவே, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளுடன் இந்தியா நம்பிக்கையான உறவை பலப்படுத்தியுள்ளது. இந்தியாவின் எண்ணெய் தேவையில் மூன்று சதவீதத்தை குவைத் பூர்த்தி செய்கிறது.
கடந்த ஆண்டு, இந்தியாவுக்கும் குவைத்துக்கும் இடையிலான ஆண்டு வர்த்தகம், சுமார் 10.47 பில்லியன் அமெரிக்க டாலாராகும். இந்த வர்த்தகத்தின் பெரும்பகுதி எண்ணெய் மற்றும் பிற எரிசக்தி பொருட்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியாவுக்கு அதிக அளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் குவைத் 6-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவுக்கு எல்பிஜி எரிவாயு விநியோகம் செய்யும் நாடுகளின் பட்டியலில் 4-வது இடத்தில் குவைத் உள்ளது.
மருந்து, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஜவுளி போன்ற எண்ணெய் அல்லாத துறைகளிலும் இந்தியா-குவைத் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. 'மேட் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பொறியியல் உதிரி பாகங்கள் மற்றும் தொலை தொடர்பு துறையில், குவைத் முதலீடு செய்ய உள்ளது.
இந்தியாவில் சுமார் பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களை உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குவைத் முதலீட்டு ஆணையம் முதலீடு செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், சர்வதேச அளவில் பாகிஸ்தான் மிகவும் பலவீனமடைந்து விட்டது. உலகளவில் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரமாகவும் வளர்ந்த நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு நட்பு நாடாகவும் இந்தியா உள்ளது. எனவே, அரபு நாடுகள், பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியாவுடன் கைக் கோர்க்கின்றன.
உலகின் எண்ணெய் இருப்புகளில் 6.5 சதவீதத்தை வைத்திருக்கும் குவைத்துடனான இந்தியா வர்த்தக ஒத்துழைப்பபால், அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவின் பெட்ரோ கெமிக்கல் துறை 300 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
புவி சார் அரசியலில், காசா போரின் காரணமாக இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா இஸ்ரேல் பக்கமும் நிற்கிறது. அதேநேரம் அரபு நாடுகளுக்கும் உதவிக் கரம் நீட்டுகிறது. அனைவருக்குமான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற அடிப்படையில், பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா ஒரு எதார்த்தமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறது என்று பாராட்டப்படுகிறது.