அரவிந்த் கெஜ்ரிவாலின் பெரிய மோசடி : மக்களை ஏமாற்றும் ஆம் ஆத்மி - சிறப்பு கட்டுரை!
டெல்லியின் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள், மகிளா சம்மன் யோஜனா மற்றும் சஞ்சீவனி யோஜனா ஆகிய திட்டங்களுக்கான பதிவு செயல் முறையைத் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், டெல்லி மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, அத்தகைய திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மகிளா சம்மன் யோஜனா மற்றும் சஞ்சீவனி யோஜனா ஆகிய திட்டங்கள் டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய திட்டங்களாகும். சஞ்சீவனி யோஜனா என்பது டெல்லியில் வசிக்கும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மக்களுக்கு முழுமையான சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் திட்டமாகும்.
முதல்வர் மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் , டெல்லியில் உள்ள தகுதியுடைய பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டமாகும். 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட்டில், டெல்லி மாநில அரசு, முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு,டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற துடிக்கும் வேகத்தில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தத் தொகை 2,100 ரூபாயாக ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
பெண்களுக்கான மகிளா சம்மன் யோஜனா திட்டத்தில், சுமார் 40 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என்றும், சஞ்சீவனி யோஜனா திட்டத்தால் சுமார் 15 லட்சம் மூத்த குடிமக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு திட்டங்களுக்காக பதிவு செய்யும் செயல்முறையை அதிஷியுடன் சேர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த இரண்டு திட்டங்களுக்கான மக்கள் பதிவு பிரச்சார இயக்கத்தில் ஆம் ஆத்மி அரசின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த திட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை என்றும், எந்தவொரு தனிநபரோ அல்லது அரசியல் கட்சியோ இது சம்பந்தமாக மக்களிடம் இருந்து விண்ணப்பங்களைச் சேகரிப்பது மோசடி என்றும் டெல்லி மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை வந்த சிறிது நேரத்திலேயே, அடுத்த வரும் நாட்களில் அதிஷி ஜியை போலி வழக்கு போட்டு கைது செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும், அதற்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மீது ரெய்டு நடத்தப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையின் கீழ் டெல்லி அரசு நிர்வாகம், 7000 கோடி ரூபாய் பற்றா குறையுடன் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறியுள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பன்சூரி ஸ்வராஜ், டெல்லியில் செயல்படுத்தப்படாமல் இருக்கும் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பிரதமர் மோடி அரசின் நலத்திட்டங்களை கெஜ்ரிவால் அரசு வேண்டுமென்றே முடக்கி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி, டெல்லி மக்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்தி மாநிலத்தை நிதி அழிவுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் வெளிப்படையான மக்கள் வளர்ச்சிக்கான நிர்வாகத்தையே எதிர்பார்ப்பதால், டெல்லி மக்கள் மாற்றத்துக்குத் தயாராகி விட்டனர்.
இதன் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இல்லாத பாஜக இந்த முறை ஆட்சி பிடிக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது.