அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என மத்திய அமைச்சர் உறுதி : விவசாயிகள் குழு
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தமிழக விவசாயிகள் குழு தெரிவித்துள்ளது.
Advertisement
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 4 ஆயிரத்து 981 ஏக்கர் நிலத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
அதன்பேரில், தமிழக விவசாயிகள் குழுவை சேர்ந்த 8 பேர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் டெல்லியில் மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர்.
அப்போது டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்பதற்கான காரணங்களை அமைச்சரிடம் விவசாயிகள் குழுவினர் எடுத்துரைத்தனர்.
இதுதொடர்பாக பேசிய அவர்கள், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.