அரியலூர் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்பு!
அரியலூரில் மருதையாறு நடுவே சிக்கிக்கொண்ட 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கனமழையால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றின் நடுவே சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், 8 மாத குழந்தை உட்பட 7 பேரை போராடி மீட்டனர்.
இதனிடையே பெரம்பலூர் கவுள்பாளையம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்தனர்.
பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கவுள்பாளையம் பகுதியில் சுமார் 44 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 77 குடியிருப்புகள் கொண்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிதாக அமைக்கப்பட்டது.
இதனையடுத்து பழைய இடத்திலிருந்து அவர்களை அவசர அவசரமாக அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகம் புதிய இடத்தில் குடியமர்த்தினர்.
ஆனால், அடிப்படை வசதிகள் ஏதும் முழுமை அடையாமல் உள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டிவந்தனர். இதற்கிடையே, கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இலங்கை தமிழர் முகாமில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.