அரையாண்டு விடுமுறை - தெப்பக்காடு யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
புத்தாண்டு விடுமுறையை ஒட்டி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிக பழமையான தெப்பக்காடு யானைகள் முகாமில், 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சேதங்களை விளைவிக்கும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட இந்த யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கும்கி யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக தெப்பக்காடு யானைகள் முகாமில் கம்பு, ராகி, கேழ்வரகு உள்ளிட்ட சத்தான உணவுகள் அளிக்கப்படுவது வழக்கம்.
இதனை கண்டு ரசிக்க அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில், அரையாண்டு மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
தமிழக சுற்றுலா பயணிகளை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர், யானைகளுக்கு பாகன்கள் உணவளிப்பதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.