அலோபதி,ஹோமியோபதி, எந்த மருத்துவம் சிறந்தது? சிறப்பு கட்டுரை!
2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அலோபதி மருத்துவ சிகிச்சையை விடவும் ஹோமியோபதி மருத்துவச் சிகிச்சையே சிறப்பானது என்று, ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
19 ஆம் நூற்றாண்டில்தான் ஹோமியோபதி என்ற மருத்துவ முறை அறிவியல் ரீதியாக வளரத் தொடங்கியது. இதற்கான பெருமை ஜெர்மனியில் வாழ்ந்த டாக்டர் சாமுவேல் ஹனிமனையே சேரும்.
சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மருந்துகள், மக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தோன்றியது தான் ஹோமியோபதி மருத்துவம் ஆகும்.
சமீபத்தில், ஐரோப்பிய குழந்தை மருத்துவ இதழில், பிறந்து, 24 மாதங்களுக்குள் குழந்தைகளுக்கு வரும் நோய்களுக்கான சிகிச்சைக்கு ஹோமியோபதி மருத்துவமே சிறந்தது என்ற ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது.
தெலங்கானாவில் உள்ள ஜீயர் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் மருத்துவமனையின் ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், இந்த ஆய்வினை நடத்தி இருக்கிறது.
மருத்துவமனையின் வெளி நோயாளிகள் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், பிறந்து 24 மாதங்களுக்குள் உள்ள 108 குழந்தைகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், ஹோமியோபதி சிகிச்சை முறைகளைப் பின்பற்றி, காய்ச்சல் ,வயிற்றுப் போக்கு, சுவாசத் தொற்று உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
அலோபதி மருத்துவத்தில், குழந்தைகளுக்கான இத்தகைய நோய்கள் 21 நாட்களில் குணமான நிலையில், ஹோமியோபதி சிகிச்சையின் மூலம் , 5 நாட்களில் நோய்கள் குணமாகின்றன என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது, பூரண குணமாக,அலோபதி மருத்துவத்தின் சிகிச்சை நாட்களில் மூன்றில் ஒரு பங்கு தான் ஹோமியோபதி சிகிச்சைக்கு தேவை படுகிறது.
மேலும், ஹோமியோபதி சிகிச்சையால், குழந்தைகளுக்கு மருந்து ஒவ்வாமை உட்பட வேறு எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், ஆன்டிபயாட்டிக் பயன்பாட்டை குறைத்து, வழக்கமான மருத்துவ பின்னணியுடன் குழந்தை இருந்தாலும், மேம்பட்ட சிகிச்சை அளிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
குழந்தை மருத்துவத்தில், ஹோமியோபதி சிகிச்சையை ஒருங்கிணைப்பது, ஆண்டிபயாட் மருந்துகளுக்கு மாற்றாக அமையும் என்று ஹோமியோபதி மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
அலோபதிக்கு பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் மலிவான மாற்றாக ஹோமியோபதி மருத்துவம் இருக்கிறது என்பதையே இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.