அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா? - எச். ராஜா கடும் கண்டனம்!
அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா?, தமிழக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கோவையில் 58 அப்பாவி ஹிந்துக்களை வெடிகுண்டு வைத்து கொடூரமாக படுகொலை செய்த குண்டுவெடிப்பு குற்றவாளி பயங்கரவாதி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்த தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிப்பது, பயங்கரவாதிகளை நல்லவர்களாக சித்தரிக்க முயலும் செயல் மட்டுமின்றி வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வங்க தேசத்தில் தொடர் தாக்குதலுக்கு உள்ளான ஹிந்துக்களுக்காக தற்போது காங்கிரஸ் கட்சி கூட குரல் கொடுக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வங்க தேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுப்பது கூட கண்துடைப்பு நாடகமாக இருந்தாலும் இதுவரை திமுக வங்க தேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கவே இல்லை.
வங்க தேசத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான ஹிந்துக்களுக்காக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னால் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாயக முறையில் ஹிந்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது அதற்கு மறுப்பு தெரிவித்து, அறவழியில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்தது தமிழக காவல்துறை.
கோவை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த ஹிந்துக்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அனுமதி மறுத்து பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஹிந்து இயக்கங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது தமிழக காவல்துறை. தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் அவர்களின் இறுதி ஊர்வத்தை நடத்தவும், அவரது படுகொலைக்கு நீதி கேட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஹிந்து இயக்கங்கள் சார்பாக மெளன ஊர்வலம் நடத்தவும் ஹிந்து இயக்கங்கள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரிய போது அக்கோரிக்கையை நிராகரித்து அன்று அனுமதி மறுத்தது தமிழக காவல்துறை.
ஆனால் கோவையில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தி 58 அப்பாவி ஹிந்துக்களை படுகொலை செய்து பலர் உடல் ஊனமுறுவதற்கும் காரணமான மிகக்கொடிய பயங்கரவாதி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிப்பதிருப்பதை பார்க்கும் போது தமிழக அரசும், காவல்துறையும் பயங்கரவாதிகள் விஷயத்தில் தொடர்ந்து மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கிறதோ என்கிற சந்தேகத்தை ஹிந்துக்கள் அனைவருக்கும் ஏற்படுத்துகிறது.
கோவை குண்டுவெடிப்ப குற்றவாளி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதற்கு காவல்துறை அனுமதிக்கக்கூடாது என்பதே ஹிந்துக்கள் அனைவரின் கோரிக்கையாகும். தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக இவ்விஷயத்தில் நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.