ஆங்கில புத்தாண்டு - ரசிகர்களை நேரில் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்!
தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டின் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பு அவரது ரசிகர்கள் கூடியிருந்தனர்.
இதனையடுத்து தனது வீட்டின் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், ரசிகர்கள் அன்பளிப்பாக கொடுத்த புத்தகத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பாட்ஷா பட வசனத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, நடிகர் ரஜினிகாந்த் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான் எனவும், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா கைவிட்டுடுவான் எனவும் பதிவிட்டிருந்தார். புத்தாண்டு வாழ்த்துகள், 2025-ஐ வரவேற்போம் எனவும் அவர் பதிவிட்டிருந்தார். ரஜினியின் வாழ்த்தால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.