திமுக மீது தொடரும் அதிருப்தி : கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சிகள்? - சிறப்பு கட்டுரை!
திமுக ஆட்சிக்கு வந்தபின்பு முதல் மூன்றாண்டு ஆண்டுகள் அக்கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்ட கூட்டணிக் கட்சிகள் தற்போது கண்டித்து அறிக்கை வெளியிடத் தொடங்கியுள்ளன. திமுக அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தியில் கூட்டணியை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கும் கூட்டணிக் கட்சிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.
திமுகவின் தயவாலும், பண உதவியாலும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் திமுக ஆட்சியின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை கண்டும் காணாதது போல கடந்த சென்ற கூட்டணிக் கட்சிகள் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் திமுக அரசை விமர்சிக்கவும், கண்டிக்கவும் தொடங்கியுள்ளன.
அண்மையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று திமுகவை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவரே கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்தி திமுகவுக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தற்போது ஆதவ் அர்ஜுனாவை பகடைக்காயாக பயன்படுத்தி ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அடுத்து வரும் தேர்தலில் அதிகளவிலான இடங்களை கேட்டுப்பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
தமிழக அரசியல் களம் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும், அதன் தலைவர் திருமாவளவனையும் சுற்றிவருவதை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தற்போது மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பும் வகையில் திமுக அரசு நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
ஏற்கனவே சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுக அரசு நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு நிர்வாகத்தில் நடைபெறும் குளறுபடிகள் வெளிப்படையாகவே கண்டிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சாரம் செய்வது, போராட்டம் நடத்துவது, அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள் எனவும் ஆனால் தமிழகத்தில் தெருமுனைக்கூட்டம், ஊர்வலம் என அனைத்திற்குமே அனுமதில் தருவதில் காலதாமதம் செய்வதும், தொட்டதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என கைது செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளின் உதவியோடு மேம்படுத்தும் பள்ளிக்கல்வித்துறையின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்லாது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அக்கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்ட கூட்டணிக் கட்சிகள் தற்போது தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் திமுகவை கண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது கூட்டணியை விட்டு வெளியேறும் முயற்சியா ? அல்லது கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.