ஆங்கில புத்தாண்டு 2025 - கோயில்களில் சிறப்பு வழிபாடு!
புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருச்செந்தூர் முருகன் கோயில் நள்ளிரவு நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு விஸ்வரூப தீபாராதனையும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள சின்னம்மன் கோயில் முழுவதும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சென்னை வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் குமரகோட்ட முருகர் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புத்தாண்டை ஒட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத குமர கோட்ட முருகர் கையில் வேலுடன் வெள்ளி தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.