ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் முதலிடம்!
ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் வெளியிட்டுள்ள பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார்.
ஏ.டி.ஆர் (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்தியாவில் உள்ள 31 மாநில முதலமைச்சர்கள் சமர்பித்துள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு, பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த தரவுகளின்படி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 931 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
332 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு 2-ஆம் இடத்திலும், 51 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா 3-ஆம் இடத்திலும் உள்ளனர்.
8 கோடியே 80 லட்சம் சொத்து மதிப்புடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 14-ஆம் இடத்தில் உள்ளார். இந்த தரவுகளின்படி, 15 லட்சம் ரூபாய் சொத்து மதிப்புடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்தியாவின் ஏழை முதலமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.