ஆம் ஆத்மி மீது துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் புகார்!
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள திட்டங்களின் பெயரில், பொதுமக்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள டெல்லி தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் 'மகிளா சம்மன் யோஜனா' என்ற திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கினாலும், செயல்பாட்டுக்கு வரவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சி அமைத்தால், பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகை 2 ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தப்படுமென ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார்.
அதேபோல், டெல்லியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கும் சஞ்சீவினி என்ற திட்டத்தையும் அவர் அறிவித்தார். இந்த திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான முகாம்களை, அரவிந்த் கெஜ்ரிவாலும், டெல்லி முதலமைச்சர் அதிஷியும் அண்மையில் நடத்தினர். ஆனால், இதுபோன்ற திட்டங்கள் செயல்பாட்டில் இல்லாததால் பொதுமக்கள் தங்களது தகவல்களை தந்து ஏமாற வேண்டாமென டெல்லியின் மகளிர் மேம்பாட்டுத்துறையும், சுகாதாரத்துறையும் அறிக்கை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதாக டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்சித், துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் புகார் அளித்தார். மேலும் அவர், டெல்லி தேர்தலையொட்டி பஞ்சாப்பிலிருந்து பணம் கொண்டு வரப்படுவதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளை பஞ்சாப் உளவுத்துறையினர் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி தலைமை செயலாளர், காவல் ஆணையர் ஆகியோர் விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பதிலளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும், லட்சக்கணக்கான மக்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளது பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.