ஆருத்ரா தரிசனம்! : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் இராஜவல்லிபுரம் செப்பரை அழகியகூத்தா் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் அம்பாசமுத்திரம் காசிநாதர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளானோர் கலந்து கொண்டனர்.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மணமுருகி வழிபட்டனர்.
இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் திருகோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் காமாட்சி அம்பாள் மற்றும் ஏகாம்பரநாதருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதணைகளும் நடைபெற்றன.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில், நடராஜ பெருமானுக்கு 33 பழ வகைகளில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
இதேபோல் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் மதுரை திருவேடகம் ஏடகநாதர் கோயில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.