ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி - சென்னை காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!
ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. அதேநேரம் ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த சென்னை காவல்துறை அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், பாஜக தரப்பில் வழக்கறிஞர் ஏற்காடு மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி வழங்க மறுக்கும் காவல்துறை, எந்த விண்ணப்பமும் பெறாமல் ஆளுங்கட்சி போராட்டம் நடத்த அனுமதித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
விதியை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.