ஆஸ்திரேலிய கிரிக்கெட் - ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள் - சிறப்பு தொகுப்பு!
ஆஸ்திரேலியாவில் 12 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் பிரிவில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், இந்திய கிரிக்கெட் வீரர்களே அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மேற்கு மெல்பர்ன் புறநகரில் தெற்காசிய பங்கேற்பாளர்களைக் கொண்ட கிரிக்கெட் அணிகளின் எண்ணிக்கை எட்டு ஆண்டுகளில் நூற்று பத்தில் இருந்து இருந்து 420 ஆக உயர்ந்துள்ளது.
முன்னாள் FOOTIE வீரரும், விளையாட்டுத் தொகுப்பாளருமான பால் கென்னடியிடம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில், இந்தியாவின் தாக்கம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பால் கென்னடி, ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் எதிர்காலமாக இந்தியா உட்பட தெற்காசிய கிரிக்கெட் வீரர்களே இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
எல்லா விளையாட்டுக்களிலும் காலம் தோறும் அந்த விளையாட்டை விருப்பத்துடன் விளையாடும் வீரர்கள் தேவைபடுகிறார்கள். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால், ஆஸ்திரேலியாவின் வாழ்க்கையில் இந்தியா ஒரு பெரிய பகுதியாகி விட்டது. புலம் பெயர்ந்த இந்தியர்களின் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆஸ்திரேலியாவில் அனைத்து மட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே. ஆனால், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Cricket Blast எனப்படும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கிரிக்கெட் பாணி அறிமுகத் திட்டத்தில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தைகள் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது.
கடந்த ஆண்டு Cricket Blast திட்டத்தில் சேர்ந்தவர்களில் 26 சதவீதம் சிறுவர்களும், 29 சதவீதம் சிறுமிகளும் தெற்காசியாவை சேர்ந்தவர்கள் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
உள்ளூர், மாநில மற்றும் தேசிய அமைப்புகளால் நடத்தப்படும் பிரதிநிதித்துவ கிரிக்கெட் போட்டிகளில் கூட 17 சதவீதம் பேர் தெற்காசிய வம்சாவளியினர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். மேலும், 12 வயதிற்குட்பட்ட பிரிவில், இந்த எண்ணிக்கை ஆண்களில் 40 சதவீதமாகவும், பெண்களில் 25 சதவீதமாகவும் உள்ளது.
இது ஒரு புறம் இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் தொழில்முறை கிரிக்கெட் வீரராக இன்னும் நிறைய தெற்காசியர்கள் வரவில்லை. தெற்காசிய குடும்பங்களைச் சேர்ந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் எண்ணிக்கை 5 சதவீதமாக உள்ளது. உஸ்மான் கவாஜா மற்றும் அலனா கிங் ஆகியோர் மட்டுமே தேசிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மாநில அளவில் தெற்காசிய வீரர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.